ராயக்கோட்டை, ஜூன்16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்தும், மல்ச்சிங் சீட் முறை, குடில் அமைத்து பூக்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் பூக்களை வியாபாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில், பூக்கள் சாகுபடிக்கு ஏற்ற சீதோஷ்ணம் நிலவி வருவதால் மஞ்சள், வெள்ளை, வயலட் மற்றும் ஐஸ்வர்யா என வகையான பூக்களை பயிரிடுகின்றனர்.
நடப்பு ஆனி மாதத்தில் திருமணங்கள், திருவிழாக்கள் நடைபெறுகிறது. ராயக்கோட்டையில் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை பூக்களின் விலை குறைந்திருந்தது. தற்போது, தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை மெதுவாக உயரத்துவங்கி உள்ளது. நேற்று ராயக்கோட்டை அடுத்த கருக்கனஅள்ளி, குட்டூர் கிராமங்களில் விளைந்த வயலட் கலர் சாமந்தி பூக்களை விற்பனைக்கு அனுப்ப பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராமத்தில் வியாபாரிகள் நேரடியாக வந்தும், பூக்களை மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர்.
