ராயக்கோட்டை, ஜூன் 15: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில், காலிபிளவரை அதிக அளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ராயக்கோட்டையில் காய்கறி விளைச்சலுக்கான நல்ல சீதோஷ்ணநிலை நிலவுவதால், காலிபிளவருடன் முட்டைக்கோசுவும் நல்ல தரமானதாக விளைச்சலாகிறது. இதனால் இங்கு விளைச்சலாகும் காலிபிளவர் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களுக்கும், புதுச்சேரி, கேரளாவிற்கும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். அதோடு அதிக அளவில் சிங்கபூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது சாகுபடி பரப்பு அதிகரிப்பால் விளைச்சல் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக வரத்து அதிகரித்து ராயக்கோட்டை காய்கறி மண்டிகளில் முட்டைக்கோசுவும், காலிபிளவரும் நிரம்பி வழிகின்றன. அதனால் 15 முதல் 20 வரை உள்ள ஒரு மூட்டை காலிபிளவர் ரூ.200க்கும் குறைவாக விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சாகுபடி செலவினங்கள் அதிகமாவதால், விலை குறைந்து விற்பதால் நஷ்டமடைவதாக கூறுகின்றனர். ரூ.10க்கும் குறைவாக கொள்முதல் செய்யும் காலிபிளவரை சில்லரை வியாபாரிகள் மற்றும் உழவர் சந்தை போன்ற இடங்களில் ஒரு காலிபிளவரை ரூ.20 லிருந்து ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.
