×

சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

 

ஓசூர், ஜூன் 15: தமிழக எல்லையான ஓசூர், கடல் மட்டத்திலிருந்து 2,883 அடி உயரத்தில் உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தையொட்டி உள்ளதால், அங்கு நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே ஓசூரிலும் ஆண்டு முழுவதும் உள்ளது. இந்நிலையில் சாலைகள் விரிவாக்கம் மற்றும் தொழிசாலைகள் அதிகரிப்பின் காரணமாக மரங்கள் அழிக்கப்பட்டது. மேலும், கிரானைட் கற்களுக்காக மலைகளும் வெடி வைத்து தகர்த்து அழிக்கப்பட்டது. இதனால், ஓசூரில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு குளிர் காலங்களில் கூட வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஓசூரில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் தான் வெயில் அதிகமாக காணப்படும். ஆனால், தற்போது கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அனல் காற்று வீசி வருவதால் உஷ்ணம் தாங்க முடியாமல், இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், ஓசூர் நகரின் முக்கிய சாலைகளான எம்ஜி சாலை, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய பெங்களூரு சாலை, சப்ரிஜிஸ்டர் சாலை, பாகலூர் சாலை மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாலை 5 மணி முதல் அரைமணி நேரம் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் தணிந்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

Tags : Hosur ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED ராயக்கோட்டை வட்டாரத்தில் வயலட் கலர் சாமந்தி விளைச்சல் அமோகம்