×

விற்பனைக்கு கொண்டு செல்லும் கொத்தமல்லி, புதினா மீது ரசாயன கழிவுநீர் தெளிப்பு: தடுக்க வலியுறுத்தல்

 

ஓசூர், ஜூன் 16: சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் விற்பனைக்கு கொண்டு செல்லும் கொத்தமல்லி, புதினா மீது தென்பெண்ணை ஆற்றில் ஓடும் ரசாயன கழிவுநீரை தெளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து மதகு வழியாக திறந்து விடப்படும் ரசாயன நுரை கலந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றின் வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது. ரசாயன கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது, கொத்தமல்லி, புதினா, கீரை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவைகளின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதனால் ரசாயன கழிவுநீரை காய்கறி சாகுபடிக்கு விவசாயிகள் பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், கீரனப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் பச்சை நிறத்தில் ஓடும் ரசாயன கழிவு நீரை, அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் சிலர், சட்ட விரோதமாக மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை, விற்பனைக்கு கொண்டு செல்லும் முன்பு தண்ணீரை ஊற்றிச் செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், `உத்தனப்பள்ளி மற்றும் சூளகிரி பகுதியில், புதினா மற்றும் கொத்தமல்லியை விற்பனைக்கு கொண்டு செல்லும் போது, வாடாமல் இருப்பதற்காக உத்தனப்பள்ளி அருகே கீரனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் செல்லும் கரும்பச்சை நிறத்தில் உள்ள ரசாயன கழிவுநீரை மின்மோட்டார் மூலம் எடுத்து தெளிக்கின்றனர். இதனை பொதுமக்கள் வாங்கி சமையலுக்கு பயன்படுத்தும் போது, பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, ரசாயன கழிவுநீரை கீரை வகைகளுக்கு நேரடியாக தெளிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தடுக்க வேண்டும்,’ என்றனர்.

 

Tags : Hosur ,Thenpennai river ,Uttanapalli ,Soolagiri ,
× RELATED ராயக்கோட்டை வட்டாரத்தில் வயலட் கலர் சாமந்தி விளைச்சல் அமோகம்