சென்னிமலை: சென்னிமலை அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாய்ப்பாடி ஊராட்சி சுள்ளிமேடு பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வறட்சியாக உள்ள இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் போதுமானதாக இல்லாததால் தினந்தோறும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தினமும் குடிநீர் வழங்க கோரி இன்று (வெள்ளி) காலை 8 மணியளவில் சுள்ளிமேடு பஸ் நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவலறிந்த சென்னிமலை போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
