விழுப்புரம்: விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்துக்கு ஈவ் டீசிங் புகார் விசாரணைக்கு சென்ற பள்ளி மாணவியை பெண் இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க மாணவி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் 17 வயதுடைய சிறுவன் தன்னை பின் தொடர்ந்து வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் பெற்றோர் மற்றும் மாணவி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து விசாரணைக்காக மாணவியை காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்துள்ளனர். விசாரணையின்போது மாணவியை பெண் இன்ஸ்பெக்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மாணவிக்கு மயக்கம் ஏற்படவே உடனடியாக அவரது பெற்றோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை அறிந்து செய்தியாளர்கள் காவல் நிலையத்திற்கு சென்றபோது கதவுகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாணவி காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பெண் இன்ஸ்பெக்டரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
தவெக ஆட்சியில் தினசரி பாலியல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாதுகாப்பில்லாத சூழல் என்ற விமர்சனங்கள் வரும் நிலையில் மகளிர் காவல் நிலையத்துக்கு பாதுகாப்பையும், நீதியையும் தேடி சென்ற பள்ளி மாணவிக்கு விழுப்புரம் காவல்நிலையத்தில் நடந்த கொடுமைக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
* மாணவர்களுக்கு ஆபாச படம்: ஆசிரியர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (35). கோவையில் தங்கியிருந்து காளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பிளஸ்-1 மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். அதனை ஒரு மாணவரின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மற்ற மாணவர்களின் பெற்றோரிடம் கூறி விசாரித்தனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர் பாபு ஆபாச படங்களை அனுப்பி இருந்தது உறுதியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் ராமநாதபுரம் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாபுவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
