மாதவரம்: மாதவரம் அருகே மாசிலாமணி நகரில் கோகுல் என்பவருக்கு சொந்தமான சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் பொருட்களுக்கான குடோன் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் இந்த குடோனில் வைக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. எளிதில் தீப்பற்றும் மரச்சாமான்கள், அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்கள் ஏராளமாக இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், மாதவரம் மற்றும் மணலி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி உயர்மின் அழுத்தம், மின் துண்டிப்பு போன்ற பிரச்னைகள் இருந்து வருவதால் மின் தீப்பொறி பட்டு அலங்கார பொருட்கள் தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் தீ விபத்திற்கு உண்மையான காரணம் குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
