×

தலைநகர் டெல்லி முழுவதும் ராகுலுக்கு எதிராக போஸ்டர்கள்: உதயநிதி, மம்தா, கெஜ்ரிவால், சரத்பவார் படங்களுடன் கண்டனம்

 

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் இன்று கூடும் நிலையில், ராகுல் காந்தி மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ‘இந்தியா’ கூட்டணியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியது. 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் இதுவரை பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லியில் என 4 முறை நடந்து முடிந்துள்ளன. தேர்தலுக்குப் பிறகு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டதால் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

குறிப்பாகத் தமிழகத்தில் திமுக உடனான உறவில் மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சி தவெக உடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் 5ம் கட்ட கூட்டம் இன்று டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நண்பகல் 12 மணிக்குக் கூடியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என திமுக மற்றும் சில முக்கிய கட்சிகள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், டெல்லி முழுவதும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரசுக்கு எதிராகப் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், ‘20 ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கிரஸ் நம்மைச் சார்ந்து வளர்ந்து வந்தது.

ஆனால் இன்று அவர்கள் நம்மை முதுகில் குத்திவிட்டார்கள்’ என்று திமுக இளைஞரணி தரப்பில் அதன் தலைவர் உதயநிதி கூறியதாக வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக, ‘காங்கிரஸ் கட்சி அதன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, எனவே நாம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்து இருக்க முடியாது’ என்ற வாசகங்களும் டெல்லி வீதிகளில் இடம்பெற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில போஸ்டர்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ‘ராகுல் காந்தியிடம் நிலையான தன்மை இல்லை’ என்று குறிப்பிட்ட வாசகங்களும், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘நாம் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டாம், அந்த வேலையை ராகுல் காந்தியே மிகவும் சிறப்பாகச் செய்கிறார்’ என்று கூறிய வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற தலைவர்களின் பெயர்களிலும் காங்கிரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் இவர்கள் எப்படி ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்ற கேள்வியுடன் திமுக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் இந்தியா கூட்டணிக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.

Tags : Rahul ,Delhi ,Udayanidhi ,Mamta ,Kejriwal ,Saratbawar ,NEW DELHI ,India Alliance ,Rahul Gandhi ,Congress ,2024 Lok Sabha elections ,BJP ,
× RELATED உணவுப் பொருட்களை செய்தித்தாளில் பார்சல் செய்ய வேண்டாம்: FSSAI எச்சரிக்கை