புதுடெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடு பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட தனியார் இணையதளம் பாதுகாப்பு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே 13ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. சுமார் 1 கோடி விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் திருத்தும் பணிக்காக ‘கோயம்ட் எடு டெக்’ நிறுவனத்தின் ‘ஆன்மார்க்’ என்ற இணையதளம் பயன்படுத்தப்பட்டது.
இந்தத் தளத்தின் மூலம் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மதிப்பெண்களில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டிற்காக இதுவரை மொத்தம் 70,433 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,314 விண்ணப்பங்கள் மதிப்பெண் சரிபார்ப்புக்கும், 63,119 விண்ணப்பங்கள் மறுமதிப்பீட்டிற்கும் பெறப்பட்டவை ஆகும். இந்நிலையில், கோயம்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்தத் தளத்தைப் பயன்படுத்துவதை சிபிஎஸ்இ அதிரடியாக நிறுத்தியுள்ளது.
மாணவர்களின் ரகசியத் தரவுகள் மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், அனைத்துத் தகவல்களும் சிபிஎஸ்இ-ன் சொந்தக் கட்டுப்பாட்டில் உள்ள சர்வர்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஐஐடி கான்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுப் பணிகள் இனிமேல் சிபிஎஸ்இ-ன் நேரடி கண்காணிப்பில் உள்ள புதிய போர்டல் மூலம் அடுத்த வாரம் தொடங்கப்படும். முன்னதாக தனது இணையதள சேவை மீது திட்டமிட்ட சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக டெல்லி போலீசாரின் சிறப்புப் பிரிவில் சிபிஎஸ்இ புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஐடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், வருகிற ஜூன் 7ம் தேதி வரை மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்காணிக்க ஒன்றிய கல்வி அமைச்சரின் உத்தரவின் பேரில் 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
