×

காபி தோட்டத்தை சுற்றிப் பார்த்த போது யானை தாக்கி டிஜிபி-யின் மனைவி பரிதாப பலி: கர்நாடகாவில் சோகம்

 

குடகு: கர்நாடகாவில் காபி தோட்டத்தில் வேலைகளைப் பார்வையிட்டபோது ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

திதிமதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து காபி உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்துவதுடன், மனித உயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் டிஜிபியாக பணியாற்றி வரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுனில் அச்சய்யாவின் மனைவி சந்தியா அச்சய்யா, நேற்று கோனனகட்டே கிராமத்தில் உள்ள தனது காபி தோட்டத்தில் பணிகளை ஆய்வு செய்யச் சென்றார். அப்போது அங்கிருந்த காட்டு யானை ஒன்று அவரைத் திடீரெனத் தாக்கியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாகத் தகவலறிந்த முதல்வர் டி.கே.சிவகுமார், சுனில் அச்சய்யாவைத் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். ‘சந்தியாவின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது; யானை தொல்லையைக் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

Tags : DGP ,Karnataka ,Kodagu ,IPS ,Kodagu district ,
× RELATED வெடிகுண்டு வெடிப்பு வழக்கில்...