×

இன்னமும் பதவி வகிப்பது ஒன்றிய கல்வி அமைச்சரின் அதிகார வெறியை காட்டுகிறது: சிபிஎஸ்இ விவகாரத்தில் காங். தாக்கு

புதுடெல்லி: சிபிஎஸ்இ ஓஎஸ்எம் விவகாரத்தில் மேலும் ஒரு முறைகேடு அம்பலமாகி உள்ள நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்னமும் பதவி வகிப்பது அவரது அதிகார வெறியை காட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

சிபிஎஸ்இயின் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு சேவையான ஓஎஸ்எம் செயல்முறைக்கான டெண்டர் பெற்ற கோஎம்ப்ட் நிறுவனம் சமர்ப்பித்த 2 சைபர் பாதுகாப்பு சான்றிதழ்களை குறித்த ஊடக செய்திகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மறைக்கப்பட்ட முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. கோஎம்ப்ட் நிறுவனம் சமர்பித்த 2 சான்றிதழ்களும் வேறு நிறுவனத்திற்காக பெறப்பட்டவை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவற்றில் ஒன்று காலாவதியாகி விட்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டு பழமையானது. மற்றொன்று தற்காலிக விண்ணப்ப அடிப்படையிலேயே தணிக்கை செய்யப்பட்டிருந்தது.

இந்த மோசடியை சுட்டிக்காட்டி நிராகரிப்பதற்கு பதிலாக சிபிஎஸ்இ நிறுவனம் கோஎம்ப்டுக்கு மிக அதிக கட்டணத்தில் ஒப்பந்தத்தை வழங்கியிருக்கிறது. கோஎம்ப்ட் நிறுவனத்தின் இணையதளம் மீளமுடியாத வகையில் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு உள்ளானது என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக சிபிஎஸ்இ இப்போது அந்த தளத்தை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மறுமதிப்பீட்டு செயல்முறைக்கு தனக்கென தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

ஓஎஸ்எம் விவகாரத்தில் சிபிஎஸ்இ கூடுதல் நேர்மையை கடைபிடித்திருந்தால் லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மன அழுத்தத்தில் இருந்து தவிர்த்திருக்க முடியும். இதன் பிறகும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் நீடிப்பது அவரது வெட்கமற்ற அதிகார வெறியை காட்டுகிறது. அவர், மிகவும் சீர்கெட்டுப் போன அமைச்சகத்தை நிர்வகிக்கும், ஆணவம் பிடித்து, திறமையற்ற நபர் என்பது முழுமையாக அம்பலமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Education Minister ,Congress ,CBSE ,New Delhi ,CBSE OSM ,Dharmendra Pradhan ,
× RELATED பினராயி விஜயனின் மகளுக்கு விரைவில் சம்மன்