×

உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் சார்பில் 1.2 கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

 

* கோவையில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துவக்கி வைத்தார்

கோவை: சத்குருவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா இன்று (05/06/2026) தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்வியக்கம் மூலம் இதுவரை 13.4 கோடி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1.2 கோடி மரங்கள் எனும் மாபெரும் இலக்கை எட்டும் வகையில், மாவட்டவாரியாகவும் மரம் நடும் பணிகளுக்கான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் 8 லட்சம் மரக்கன்றுகளும், திருப்பூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் மரக்கன்றுகளும் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளின் துவக்க விழா ஆதியோகி வளாகம், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில், ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர் கிட்டுசாமி, பாலமலை உழவர் உற்பத்தியார் நிறுவனத்தின் இயக்குனர் விஜயகுமார் ஆகியோரும் பொள்ளாச்சியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். சண்முகம், பொள்ளாச்சி வர்த்தக சபைத் தலைவர் ஏ. முத்துசாமி மற்றும் மாரியம்மன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் ஏ. பாலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு, கோவை மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தனர்.

சென்னையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், திரைப்பட தயாரிப்பாளர் ஷோபா சந்திரசேகர் ஆகியோரும் புதுவையில் முதல்வர் ரங்கசாமி அவர்களும் மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் இதன் துவக்க விழாக்கள் நடைபெற்றன. இதில் 1,00,00-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழகத்தில் மாவட்டவாரியாக நடைபெற்ற விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ‘பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்’ என்ற ஐநா-வின் இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த மாபெரும் மரம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சத்குருவின் வழிகாட்டுதலில் துவங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதியைப் புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்தை இவ்வியக்கம் ஊக்குவித்து வருகிறது.

இதன் மூலம் 2.6 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். மேலும் இவ்வியக்கம், ஐநாவின் பாலைவனமாதலைத் தடுக்கும் அமைப்பு (UNCCD) மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தங்களின் வருமானத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்க முடியும்.

இதனை ஊக்குவிக்கும் வகையில், தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் உள்ளிட்ட மதிப்புமிக்க டிம்பர் மரங்களின் கன்றுகளும், தொடர்ச்சியான வருமானத்தைப் பெறுவதற்காக சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடிய மிளகு, அவகாடோ, ஜாதிக்காய் போன்ற பயிர்களின் கன்றுகளும் விவசாயிகளுக்கு, ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் வழங்கப்படுகின்றன. ஆசியாவிலேயே மிகப்பெரியதும், முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படுவதுமான கடலூர் நர்சரியில் ஆண்டுதோறும் 85 லட்சம் மரக்கன்றுகளும், திருவண்ணாமலை நர்சரியில் 15 லட்சம் மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த இரு நர்சரிகளும் இணைந்து தமிழ்நாட்டிலுள்ள 45 விநியோக மையங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள 8 விநியோக மையங்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கி, மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பணியில் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனுடன் மரக்கன்று நடவு மற்றும் பராமரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் காவேரி கூக்குரல் இயக்கம் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கு ஏற்ற மரவகைகள் தேர்வு, நீர் மற்றும் களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி உள்ளிட்ட ஆலோசனைகளை, காவேரி கூக்குரல் களப்பணியாளர்கள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : World Environment Day ,Kaveri Kukural ,Tamil Nadu ,GOA MP KANIMOZHI SANTOSH ,GOWAI ,KAVERI KOUKURAL ,
× RELATED முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசின்...