×

மதுக்கடையை மாற்ற நீங்களே இடம் பார்த்து கொடுங்கள்..! கலெக்டர் பேச்சால் கிராமத்தினர் அதிர்ச்சி

ஈரோடு: அம்மாபேட்டை அருகே முளியனுர் கிராமத்தில் செயல்படக்கூடிய மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அருகில் இருக்கக்கூடிய பூதப்பாடி மற்றும் பூனாச்சி ஆகிய கிராமங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் அங்கு இருக்கக்கூடிய மதுப்பிரியர்கள் தற்போது முளியனுர் கிராமத்திற்கு வருவதால் பெண்களுக்கு இடையூறாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அங்கு மது வாங்கும் நபர் தரக்குறைவாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர் போரட்டம் நடத்தி வரக்கூடிய பொதுமக்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய 50 பேர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்திருந்தனர். அவரை சந்தித்து மதுபான கடையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை பற்றி எடுத்துக்கூறி, கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

உடனடியாக கடையை மூடமுடியாது. வேறு இடத்தில் மாற்றுவதற்கு அவகாசம் வேண்டும். கடையை மாற்ற வேண்டும் என்றால் வேறு மாற்று இடத்தை கிராம மக்களே பார்த்து தர வேண்டும். கிராமத்தில் இருக்கும் ஆண்கள் குடிப்பதை நிறுத்திவிட்டால் வருமானம் இல்லாமல் இந்த கடையை முடிவிடுவோம் என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறியிருக்கிறார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே 1 வாரத்திற்குள் கடையை மூடாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் எச்சரித்து இருக்கிறார்கள் .

Tags : Erode ,Mulyanur ,Ammapet ,Bothapadi ,Poonachi ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழகம்...