×

55 நாட்களுக்கு பிறகு லோயர்கேம்பில் மின்உற்பத்தி தொடக்கம்

 

கூடலூர்: தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 55 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு முதல் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணையில் இருந்து போர்வே டேம் மூலம், 4 ராட்சத குழாய்கள் வழியாக தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை கொண்டு, தேனி மாவட்டம், கூடலூர் அடுத்த லோயர்கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் அதிகபட்சம் 168 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தி நடைபெறும். நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்தது. இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 250 கனஅடிக்கு கீழ் குறைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்.11-ம் தேதி முதல் லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு குடிநீர் தேவைக்காக மட்டும் இரைச்சல் பாலம் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், லோயர் கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் நடந்து வந்த பராமரிப்பு பணி நிறைவடைந்தது. இதனிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவ மழையும் துவங்கியுள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து போர்வே டேம் குழாய்கள் வழியாக வினாடிக்கு 350 கன அடிநீர் நேற்று திறக்கப்பட்டது. இதையடுத்து லோயர் கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 55 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி துவங்கி உள்ளது. ஒரு ஜெனரேட்டர் மட்டும் இயக்கப்பட்டு 23 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப் பெரியாறு அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 625 கனஅடியாக இருந்தது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 909 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 111.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 351.66 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்த நீர்இருப்பு 1,110 மில்லியன் கனஅடி. அணையின் நீர்மட்டமும் மேலும் உயர்ந்து கூடுதல் நீர் திறக்கப்படும்பட்சத்தில் மின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Lower Camp ,Tamil Nadu ,Mullai… ,
× RELATED திருப்புவனம் அருகே அரசு பஸ் விபத்தில் 15 பேர் காயம்