×

வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா இடம் எனக்கூறி பாறைகள் உடைத்து வீடுகள் கட்ட முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

 

பொன்னை: வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா இடம் எனக்கூறி வீடுகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்திபெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மற்றும் அடிவாரப்பகுதிகள் பொதுப்பணித்துறை, தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் வள்ளிமலையின் அடிவாரத்தில் பாறைகள் அமைந்துள்ள பகுதியில், கடந்த 2 நாட்களாக சுமார் 15 சென்ட் பரப்பளவிலான இடத்தில் 5க்கும் மேற்பட்டோர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமான ‘பட்டா இடம்’ எனக்கூறி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அங்கு அவர்கள் வீடு கட்டப்போவதாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் இன்று காலையும் ஜேசிபி மூலம் பாறைகள் உடைத்து அகற்றும் பணி நடந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு வீடு கட்டும் பணி மேற்கொண்டவர்கள், 20 ஆண்டுக்கு முன் இந்த இடத்தை தங்களது பெயரில் பட்டா வாங்கிவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை, கோயில் நிர்வாகம், தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரிக்க உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: வள்ளிமலை என்பது பல நூறு ஆண்டுகள் வரலாற்றுப்பெருமை வாய்ந்தது. இன்றும் கூட பல சித்தர்கள் இங்குள்ள குகைகளில் வாழ்ந்து தவம் செய்வதாக நம்பப்படும் ஒரு புனிதமான தலம். இப்படிப்பட்ட மலை அடிவாரத்தையே ஜேசிபி கொண்டு தகர்ப்பது ஒட்டுமொத்த ஆன்மீக புனித தன்மையையும் சீர்குலைக்கும் செயலாக உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த மலையின் அடிவாரத்தில் வீட்டுமனைகள் அமைக்க எப்படி அதிகாரிகள் அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. அந்த இடம் தனி நபருக்குரிய பட்டா நிலமாகவே இருந்தாலும், மலையின் அடிவார பகுதியை தகர்ப்பதற்கும், பாறைகளை வெட்டி எடுப்பதற்கும் கனிமவளத்துறையின் முறையான அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் இங்கு எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்படுகிறது.

தற்போது மலை அடிவாரம் சிதைக்கப்பட்டு வரும் நிலையில், வேலூர் மாவட்ட நிர்வாகமும், காட்பாடி வருவாய்த்துறையினரும் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பாறைகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி நிலத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Valalimalai Temple ,Patta Place ,Ponnai ,Vellore district ,Kadpadi Taluga Vallimala ,
× RELATED நாகர்கோவில் அருகே வாலிபர்களை...