×

கி.பி.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வாள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

 

பழநி: பழநியில் கி.பி.18ம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வாள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல். இவர் தமது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த பழைய வாள் ஒன்றை பழநி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இந்த வாளை ஆய்வு செய்த அருங்காட்சியக காப்பாட்சியர் சசிகலா மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘இந்த வாள் இரும்பினால் செய்யப்பட்டது. பண்டைய நாட்களில் போருக்கு பயன்படுத்தப்பட்ட இந்த வாள் மிகவும் துருப்பிடித்து காணப்படுகிறது.

1.110 கிலோ எடை கொண்ட இந்த வாள் நீளம் 77 சென்டி மீட்டாரகவும், நடுப்பகுதியின் விட்டம் 3 சென்டி மீட்டராகவும் உள்ளது. கைப்பிடி வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும், வாளின் மேல் பகுதி சற்றே வளைந்த நிலையில் காணப்படுகிறது. இது ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையில் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. வாளின் வடிவமைப்பை பார்க்கும்போது இந்த வாள் கி.பி.17 அல்லது 18ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருத முடிகிறது.

வாள் கிடைத்த பாப்பம்பட்டி ஊரானது பண்டைய நாட்களில் இரட்டையம்பாடி பாளையப்பட்டு ஜமீன் பகுதிக்கு உட்பட்டு இருந்தது. பின் நாட்களில் இரட்டையம்பாடி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைந்தது. இந்த வாளுக்கும் இரட்டையம்பாடி ஊருக்கும் உள்ள தொடர்பு பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : Bharwal Government Museum ,Palani ,State Museum ,Murugavel ,Papampati ,Palani, Dindigul district ,Government ,Museum ,
× RELATED வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா...