×

உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களின் வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

 

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் 11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்களின் வார்டு மறுவரையறை குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்ய முடிவெடுத்துள்ளது. 177 கிராம ஊராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் எண்ணிக்கை குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு எடுத்துள்ளது. வார்டுகளின் எல்லை மறுவரையறை பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

ஆணைய தலைவர் ஜோதி நிர்மலாசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை மாற்றம் மற்றும் நிர்வாக வசதிக்கேற்ப இந்த எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census Data) அடிப்படையில் பிரிக்கப்படும்.

சில வார்டுகளில் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்திருக்கும், சிலவற்றில் குறைந்திருக்கும். வாக்களிக்கும் உரிமையில் சமத்துவத்தை பேண, அனைத்து வார்டுகளிலும் மக்கள் தொகையை சமநிலைக்குக் கொண்டு வருவதுதான் இந்தத் தீவிரப் பணியின் நோக்கம். மாநகராட்சி அல்லது நகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் போக, விடுபட்ட ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் எல்லைகளைத் துல்லியமாக வரையறுக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.

பொதுவாக, ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டில் சராசரியாக 5,000 மக்கள் தொகை இருக்குமாறு எல்லைகள் சீரமைக்கப்படும். சிதறிக்கிடக்கும் கிராமங்களை ஒன்றிணைத்து ஒரே வார்டாக மாற்றும் போது, புவியியல் ரீதியாக அவை அருகருகே இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்கிறார்கள்.. மாவட்ட ஊராட்சி வார்டுகள் பரப்பளவில் பெரியவை. பொதுவாக, ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு என்பது சராசரியாக 50,000 மக்கள் தொகையை உள்ளடக்கியதாக இருக்கும். பல ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கியதாக இந்த மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன.

வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து, ஜி.ஐ.எஸ் (GIS Mapping) தொழில்நுட்பம் மூலம் புதிய எல்லைக் கோடுகளை வரைபடமாகத் தயார் செய்கின்றனர். முதற்கட்டமாக மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் எல்லைகள் பொதுமக்கள் பார்வைக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒட்டப்படும்.

கருத்துக் கேட்புக் கூட்டங்கள்: அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எல்லைகள் குறித்த புகார்கள், ஆட்சேபனைகள் வரவேற்கப்படும். நியாயமான கோரிக்கைகள் இருந்தால் வரைபடத்தில் மாற்றங்கள் செய்யப்படும். இந்த 11 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 40 ஊராட்சி ஒன்றியங்களின் எல்லை மறுவரையறைப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்ட பின்னரே, மாநில தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட தேர்தல் தேதிகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட முடியும்.

 

Tags : Election Commission ,Chennai ,
× RELATED கோயம்பேட்டில் மின்மாற்றி வெடித்து தீ விபத்து