×

திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் கடற்கரையில் தவெக அலுவலகம் கட்ட நிலம் ஆக்கிரமிப்பில் பயங்கர மோதல்: அதிமுக நிர்வாகி, பெண் உள்பட 3 பேர் காயம்

 

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கடற்கரையில் தமிழக வெற்றிக்கழக அலுவலகம் கட்டுவதற்காக நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தொடர்பாக நடந்த மோதலில் அதிமுக பிரமுகர், பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். சென்னை திருவொற்றியூர், ஒண்டிக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான இடத்தில் தமிழக வெற்றிக்கழக கட்சியை சேர்ந்தவர்கள் கட்சி அலுவலகத்திற்காக தகரக் கொட்டகை அமைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து அங்கு ஊழியர்கள் வந்து, ‘’கடற்கரையில் அனுமதி இல்லாமல் தகரக் கொட்டகை கட்டக்கூடாது’’ என கொட்டகை கட்டும் பணியை நிறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ரவீந்திரன் (45) என்பவர் நேற்று அதே பகுதியில் நடைபெற்ற மீனவ கிராம பஞ்சாயத்தின் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு கிளம்பியபோது அதே பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஆதரவாளர்கள் ஜெய்சங்கர், ஜனரத்தினம் ஆகியோர் சேர்ந்து ரவீந்திரனிடம், ‘’ஒண்டிகுப்பம் கடற்கரையில் தவெக அலுவலகம் கட்டவிடாமல் நீதான் புகார் செய்துவிட்டாய்’’ என்று கேட்டுள்ளனர். இதில் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர்.

அங்கிருந்தவர்கள் வந்து தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். ரவீந்திரன், அவரது தங்கை ஆகியோரும் ஜெய்சங்கர் ஆகியோரும் காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுசம்பந்தமாக இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Thaveka ,Ondikuppam beach ,Thiruvottriyur ,AIADMK ,Tamil Nadu Vetrikazhaga ,Coast Guard ,Chennai ,
× RELATED தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்...