×

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

 

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை (Chewable Tobacco) பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய உத்தரவை உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.

குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட மற்றும் வாசனையூட்டப்பட்ட மெல்லும் புகையிலை பொருட்கள், நிகோடின் (Nicotine) கலந்த பிற பொருட்கள் அனைத்திற்கும் இந்தத் தடை பொருந்தும். இந்த தடை உத்தரவின்படி, மேற்கண்ட புகையிலை பொருட்களைத் தயாரிக்க, சேமிக்க, கொண்டு செல்ல, விநியோகிக்க மற்றும் விற்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு தடை நீட்டிப்பு மே 23 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ், மக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இந்தத் தடை தொடர்பாகப் பல சட்டப் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளின்படி, தமிழக அரசு தொடர்ந்து இந்தத் தடையை நீட்டித்து வருகிறது.

முதல்முறை சட்ட விரோத விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான அபராதம் விதிக்கப்படும். வணிக உரிமம் (Trade License) மற்றும் உணவுப் பாதுகாப்பு உரிமம் (FSSAI License) நிரந்தரமாக ரத்து செய்யப்படும். கல்வி நிறுவனங்களில் இருந்து 300 அடி சுற்றளவிற்குள் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் (Criminal) நடவடிக்கைகள் பாயும்.

இந்த தடையை மீறி கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்கப்படுவதைத் தடுக்க, உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாவட்ட வாரியாகத் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் இது போன்ற சட்டவிரோத விற்பனையைக் கண்டால், உணவுப் பாதுகாப்புத் துறையின் பிரத்யேகப் புகார் எண்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

 

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED ராமநாதபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு...