நன்றி குங்குமம் தோழி
அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அறை ஒதுக்குவது என்பது இயலாது. கூடம், தாழ்வாரம், வராண்டா போன்ற பெயர்களில் வீட்டின் இடங்கள் அறியப்பட்டன. எது எப்படியிருந்தாலும், படிக்கும் பழக்கம் என்பது அனைவருக்குமே உரியது. பரம்பரை பரம்பரையாக முன்னோர்கள் அவர்கள் படித்த புத்தகங்களை மர அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்கள். வக்கீல், டாக்டர் போன்ற தொழிற் படிப்பு படித்தவர்கள் வீட்டிலும் புத்தகங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். புத்தகங்களுக்கு என தனி அறை ஒதுக்கப்படாவிட்டாலும், அலமாரிகளில் இருக்கும்.
புத்தகங்கள் அடுக்கி இருப்பதைப் பார்க்கும் போது அந்த வீட்டில் உள்ளவர்கள் நன்கு படித்தவர்கள் என்ற எண்ணம் நம்மையறியாமலே ஏற்படும். தனித்து வசிக்கும் சமயங்களிலும், மனம் சோர்வுறும் நேரங்களிலும் புத்தகங்கள் தான் நம் உற்ற நண்பர்கள். சிலர் காலையில் எழுந்து காபி குடிக்கிறார்களோ இல்லையோ, அன்றைய தினசரியை புரட்டாமல் இருக்க மாட்டார்கள். புத்தகங்களை நம் சொத்து என்று கூட சொல்லலாம். அவற்றிற்கு அறைகள் ஒதுக்க முடியாமல் போனாலும், அலமாரிகளாவது ஒதுக்கி வைக்கலாமே!
பள்ளிக் காலங்களில் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டால் அப்பாவிடம் கேட்போம். அப்பா தலையனை போன்ற புத்தகத்தை புரட்டி அர்த்தத்தை விளக்கித் தருவார். இன்று அனைத்தையும் நமக்கு கூகுள் கற்றுத் தருகிறது. ஆனாலும் தந்தை எனக்காக வைத்திருந்த புத்தகங்கள் என்று சொல்லும் போது அதில் பாசமும் மறைந்திருக்கிறது.
ஆயுள் முழுவதும் சிறைச்சாலையில் இருந்தாலும் ‘புத்தகங்களோடு வாழ்நாளை கழிப்பேன்’ என்று சொன்ன தலைவர்கள் உண்டு. சிறைச்சாலையில் வசிக்கும் நாட்களில் புத்தகங்கள் எழுதிய தலைவர்களும் உண்டு. பணத்தினை களவாடலாம். ஆனால், புத்தகங்கள் தரும் அறிவினை நம்மிடமிருந்து யாராலும் களவாட முடியாது. வீட்டில் அதிக இடவசதி இல்லை என்றாலும் புத்தகங்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்குமே நம் சிந்தனை அவசியம்.
ஒரு அறையினை இருவர் பயன்படுத்தினால், சிறிய ‘பங்க் பெட்’ அமைத்தால் இடம் மிச்சமாகும். ஒருவர் என்றால் ‘சிங்கள் காட்’ அல்லது ‘சோபா கம் பெட்’ போடலாம். அதையே ‘திவான்’ போன்ற அமைப்புத் தந்தால் ‘ரிச் லுக்’ கிடைக்கும். பகலில் உட்காரவும், இரவில் படுத்துக் கொள்ள இது வசதியாக இருக்கும். மீதமுள்ள இடத்தில் ஒரு சிறிய இடத்தினை புத்தகங்களுக்காக அலமாரிகள் அமைக்கலாம். எவ்வளவுதான் சிறிய இடமாக இருந்தாலும், சுவற்றின் பரப்பளவு அதிகம் என்பதால், அங்கு ரெடிமேட் அலமாரிகளை அமைத்து அதற்கு கண்ணாடி கதவுகள் போட்டா பார்க்க அழகாக இருக்கும்.
பழைய வீடுகளில் தனித்தனியான மர பீரோக்களில் புத்தகங்கள் அழகுற அடுக்கி கண்ணாடிக் கதவால் மூடியிருப்பார்கள். பார்க்கவே ஒரு பரம்பரை சொத்து போல காணப்படும். சுவற்றில் அலமாரிகள் அமைக்கும் போது தரையில் இடம் மிச்சப்படுவதால், அலமாரியின் அடியில் மடித்துப் போடும் மேசை நாற்காலி போட்டு வைக்கலாம். அங்கு உட்கார்ந்து படிக்கவும் வசதியாக இருக்கும். புத்தக அலமாரிகள் அமைக்கும் போது அது தரையை தொடாத அளவிற்கும், தண்ணீர் பயன்படுத்தாத உலர்ந்த இடமாகவும் இருத்தல் அவசியம்.
புத்தகங்களை அடுக்கும் அலமாரி அவசியம் போல், படிக்கும் மேசை மீது விளக்கின் வெளிச்சம் சரியாக படும்படி இருத்தல் வேண்டும். அலுவலக வேலைகளை நிறைய பேர் இப்பொழுது வீட்டில் செய்கிறார்கள். விதவிதமான டிசைன்களில் ‘ஆபீஸ் டெஸ்க்’ ரெடிமேடாகவே கிடைக்கிறது. அதனை இடத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். மேலும், அலுவலக பொருட்கள் வைக்க வசதியாக நிறைய ‘டிரா’க்களை தரலாம். மேல் பாகம் முழுவதும் புத்தக அலமாரிக்காக ஒதுக்கிக் கொள்ளலாம். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும் பல வசதிகளை ஒருமித்துத் தரும் வசதியால் அறை அழகான பொலிவைத் தரும். நமக்கு வேலை செய்யவும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும்.
‘கம்ப்யூட்டர்’ பயன்பாடும் அதிகமாகி விட்டதால் அதற்கான இடத்தையும் சரியான விதத்தில் அமைப்பது அவசியம். பெரிய கனமான மேசை போட்டு, அதன் மேல் தேவைகளை செய்வதை விட, சிறிய இடத்திற்கு தகுந்த மேசை அமைப்போடு, அழகுற உள் அமைப்புத் தந்து, அதன் மேற்பகுதி புத்தக அலமாரிகளை அமைத்துக் கொள்ளலாம். இவை அனைத்துமே இட வசதி இல்லாதவர்களுக்கும், சிறிய வீட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமே! இடம் இருப்பவர்களும், பெரிய வீட்டில் இருப்பவர்களும் படிப்பதற்கு தனி அறை அல்லது தனி இடமே அமைத்துக் கொள்ளலாம்.
வீட்டை அழகுபடுத்த வேண்டும், பொருட்களை அழகாக அடுக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு. அதிலும் புது வீடு வாங்கி விட்டால், அதற்கான பொருட்களை தேடித் தேடி வாங்குவோம். குறிப்பாக ‘ஷோகேஸ்’ என்னும் அலங்கார அலமாரி, சமையலறையில் ‘மாடுலர் கிச்சன்’ போடவே விரும்புகிறார்கள். புத்தகங்களுக்கு தனி அலமாரி செய்துவிட்டால், நம் சந்ததிகளும் அதைப் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.
‘வீட்டுக்கொரு புத்தகாலயம்’ என்பது நாட்டிற்கான அறிவு, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான அடிப்படையாகவே அமையும். கலைத்திறன் மூலம் வரவேற்பறையை அலங்கரிப்பது ேபால், அறிவுத்திறனால் அழகிய புத்தக அறை அமைக்க முடியும். விடை கிடைக்காத பல்வேறு கேள்விகளுக்கு பழைய புத்தகங்களை புரட்டினால் போதும். இன்று எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதிலும், பழமையான புத்தகங்கள்தான் அன்றைய காலகட்டத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.
புத்தகங்கள் நம் அறிவுப் பசியைத் தூண்டி, சாதனைக்கு அடித்தளம் அமைத்துத் தருகின்றன. சிலரிடம் அருமையான புத்தகங்கள் இருந்தும், அதை அவர்களுக்கு காட்சிப்படுத்த தெரியாது. நம்மிடம் இருக்கும் புத்தகங்களை சரியான இடத்தில், சரியான விதத்தில் கண்களுக்கு விருந்தாக அடுக்கினாலே போதும்.
விலை உயர்ந்த, தரம் வாய்ந்த புத்தகங்களை முதல் வரிசையில் கண்களில் படும்படி வைத்தால்தான், வளரும் பிள்ளைகளுக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படும். அலமாரியை தரையை ஒட்டி அமைத்தால், நமக்கே தெரியாமல் தண்ணீர் பட்டு பக்கங்கள் அழிந்து பாழாகும். பூச்சிகள் அடைய வாய்ப்பு வரும். மிக உயரத்தில் வைத்து விட்டாலும், கண் பார்வையிலிருந்து மறைந்து விடும். ‘செல் அரித்து விடும்.’ எனவே சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அடுக்குவது முக்கியம்.
புத்தகங்கள் அடுக்குவதிலும் பல்வேறு முறைகள் உள்ளன. ஒரே சைஸில் உள்ள புத்தகங்களை வகைப்படுத்திக் கொள்ளலாம். ‘பைண்டு’ செய்யப்பட்டவை, அட்டையுடன் கூடியவை என பிரிக்கலாம். பாடம் சம்பந்தப்பட்டவை, பொது அறிவுப் புத்தகங்கள், தினசரித் தேவைக்கு புரட்டும் புத்தகங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள், மேற்கோள் காண பயன்படுத்தும் புத்தகங்கள், சட்டப் புத்தகங்கள், மருத்துவம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என தர வாரியாக பிரித்துக் கொள்ளலாம்.
பின் மொழி வாரியாக பிரித்து அடுக்கலாம். பின்புறம் புத்தகப் பெயர் தெரியும்படி வரிசைப்படுத்தலாம். புத்தகத்தில் பாகம் 1, பாகம் 2 போன்ற பிரிவுகள் இருப்பின் அதன்படி அடுக்குவதும் முக்கியம். சில பழைய புத்தகங்களில் பெயர் மறைந்திருக்கலாம் அல்லது அட்டை கூட கிழிந்திருக்கலாம். அட்டையிட்டு, பெயரை பின்புறம் எழுதி ஒட்டலாம். அப்போதுதான் எந்த புத்தகம் தேவைப்பட்டாலும் எடுத்து பயன்படுத்த முடியும். இந்த மாதிரி புத்தகசாலை நிர்வகிக்கவே தனிப்பட்ட படிப்பு உள்ளதென்றால், அதன் முக்கியத்துவம்தான் காரணம்.
புத்தகங்கள் அடுக்க போதிய இடம் இல்லை; அலமாரிகளும் கிடையாது என்று சொல்பவர்கள், தனி இடம் ஒதுக்க முடியாதவர்கள் ‘ஷோகேஸின்’ ஒரு சில தட்டுக்களை புத்தகங்கள் அடுக்க பயன்படுத்தலாம். எளிய முறையில் தட்டுக்களாக மரத்தில் செய்து, நடுப்பிரிவு அமைத்து சுவற்றில் கூட பொருத்திக் கொள்ளலாம். சிறிய அடுக்குமாடி அல்லது மிகச்சிறிய அறையாக இருந்தாலும், சுவற்றில் அமைத்துக் கொள்ள முடியும்.
காரணம், தரையின் அளவை விட சுவர் நான்கு மடங்கு பெரிதாக இருப்பதால், வீடு கட்டும்போதே கூட நல்லா யோசித்து ‘பிளான்’ செய்து வேண்டிய வசதிகளை செய்யலாம்.
‘படிக்கும் அறை’ அமைப்புத் தர வேண்டுமென நினைத்தால், மாடிப்படி அடிப்பகுதியை கூட ‘டிசைன்’ அமைத்து சிறிய படிக்கும் அறையாக அமைக்கலாம். அந்தப் படிகளின் வடிவில், கீழே அலமாரிகள் அமைத்து புதிய வடிவம் தரலாம். வசதி இருப்பவர்கள் அவ்விடத்தை பிள்ளைகள் படிக்கும் இடமாகக் கூட அமைத்துத் தரலாம். பிள்ளைகளுக்கான பல்ேவறு புத்தகங்கள் வெளிவருகின்றன. அதனை வாங்கி அடுக்கி, படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தித் தரலாம்.
நாம் ஒரு விஷயத்தை கருத்தில் கொண்டால் போதும்! எந்த வேலை அல்லது செயல் செய்வதானாலும் அதற்கேற்ற அழகான சூழலை நன்கு அமைத்துவிட்டால் போதும். உட்காருவதற்கு வசதியான நாற்காலியும், மேசை மேல் வைத்து படிக்கவும், எழுதவும் பொருத்தமான மேசையும் தேவை.
காற்றோட்டமும், வெளிச்சமும் கொண்ட இடமாக இருக்க வேண்டும். இருட்டான இடத்தில் புத்தகங்களை அடைத்து வைத்தால் கரையான் அரித்து விடும். வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப்படுவது போல, அறிவுப் பசிக்கு புத்தகங்கள் தேவை. பள்ளி, கல்லூரிகளில் அதனால்தான் விலைஉயர்ந்த புத்தகங்களை பரிசாகத் தருகிறார்கள். இன்றைய தலைமுறையில் நிறைய குழந்தை எழுத்தாளர்கள் உருவாகிறார்கள். வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்துவதற்காகவே நிறைய தமிழ் அமைப்புகள் செயல்படுகின்றன.
சில வீடுகளில் நிறைய தினசரிகள், புத்தகங்கள் வாங்குவார்கள். ஆனால், படித்து விட்டு கடையில் போட்டு விடுவார்கள். அவற்றில் வரும் முக்கியமான தொடர்கள், குறிப்புகள் போன்றவற்றை தனியே எடுத்து சேர்த்து வைத்து நூறு பக்கங்கள் ஆனவுடன் பைண்ட செய்து புத்தகமாக்கலாம். முக்கிய நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள் போன்றவற்றை சேகரித்து புத்தகமாக்கும் பொழுது, ஒருநாள் அவை நம் பிள்ளைகளுக்கு பயனாகும்.
அதனால்தான் மேலை நாடுகளில் படிப்பதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். எழுதும் திறமை குறைவாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக தனி கவனம் செலுத்தலாம். ஆனால், படிக்கும் பழக்கம் அவசியம் என்பதை வலியுறுத்துகிறார்கள். ஒரு வயது குழந்தை கூட மழலையில் பார்த்துக் கூறும் அமைப்பிலான நிறைய புத்தகங்கள் வண்ணமயமாக உளவியல் சம்பந்தப்பட்டவை கிடைக்கின்றன. ஒன்றாம் வகுப்பு சென்றவுடனேயே புத்தகம் படிக்கிறார்கள். படம் பார்த்து கதை சொல்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் பிறந்த நாளுக்கு ஒரு புத்தகம் வகுப்பிற்கு எடுத்து வர வேண்டும். பிறந்த நாள் கொண்டாடும் குழந்தை புத்தகம் முழுவதையும் வகுப்பில் வாசித்துக் காட்டிவிட்டு பள்ளிக்கே தந்து விட வேண்டும். இது போல் சேர்ந்த புத்தகங்களை ஒவ்வொரு வகுப்பறையிலும் புத்தக சாலையாக வடிவமைத்து விடுகிறார்கள். அதே போல் வீட்டு வெளிவாசல்களில் அலமாரிகள் அமைத்து புத்தகங்களை அடுக்கி வைக்கிறார்கள்.
வேண்டியவர்கள் விரும்பும் புத்தகத்தை எடுத்து படித்துக் கொள்ளலாம். தங்களிடம் வேண்டாத புத்தகங்களையும் அதில் கொண்டு வந்து வைக்கலாம். பலவிதமான விளையாட்டுக்கள் விளையாடுவது போல, பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. புத்தகங்கள் விலை மதிப்பற்றவை. புத்தகங்களை சேமிக்கவும், பரிசாக கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம். சாண் இடமானாலும், படிப்பதற்கு ஒரு இடம் ஒதுக்குவோம். நம் சமுதாய அறிவு வளர்ச்சியைக் காட்டுவது புத்தகங்களே! கொஞ்சம் இடம் ஒதுக்கி வைத்தால், நமக்குப் போதிய அறிவைத் தந்து, நம் சந்ததியினரை அறிவாளியாக்கும்!
