×

டிஜிட்டல் யுகம்: ஒரு புலனாய்வு பார்வை!

நன்றி குங்குமம் தோழி

போலி வர்த்தக மோசடிகள்!

பாரம்பரிய வங்கி சேவைகள், பணப்பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் காப்பீடு போன்ற நிதிச் செயல்பாடுகளை, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மொபைல் மற்றும் இணையம் வழியாக நொடிப்பொழுதில் செய்துவிடும் ஒரு நவீன அமைப்பாக இந்த டிஜிட்டல் நிதி உலகம் உருவாகிஉள்ளது. நிதி சேவைத்துறையில் இது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த டிஜிட்டல் நிதி உலகில் கிரிப்டோகரன்சி, பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் வளர்ச்சிக்கு இணையாக போலி வர்த்தக மோசடிகளும் (Fake Trading Scam) மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.

சைபர் குற்றவாளிகள் தனி நபர்களை குறிவைத்து ஆசைக்காட்டி ஏமாற்றும் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். இது போன்ற மோசடிகளில் பெரும்பாலும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களின் மூலம் தனிநபர்களை அணுகுகின்றனர். சைபர் குற்றவாளிகள் தங்களை ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களின் வர்த்தகச் செயலியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறுவார்கள். ஜரோதா (Zerodha) போன்ற பிரபலமான செயலிகளை எடுத்துக்கொண்டு அதன் தோற்றத்திலேயே போலியான செயலிகளை (Cloned Apps) உருவாக்கி அதன் பெயர்களில் எளிதில் கண்டறிய முடியாத அளவில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.

இந்த செயலிகளின் இணைய முகவரி (URL) அசலைப் போலவே இருக்கும். ஆனால், அதிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். பணம் நாட்டமுள்ள நபர்களையும் போதிய விழிப்புணர்வு இல்லாத நபர்களையுமே மோசடியாளர்கள் பெரும்பாலும் குறி வைக்கின்றனர். சோசியல் என்ஜினியரிங் செய்வதன் மூலம் தனிநபர்களின் பலவீனத்தை கண்டறிந்து அதன் வழியே மோசடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.

டெலிகிராம் மூலம் அணுகும் இவர்கள் எங்கள் டிரேடிங் தளத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிகப்படியான லாபத்தை பெறலாம் என்ற ஆசையை தூண்டுகின்றனர். எந்த நேரத்தில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்யலாம், எப்போது அதிகமான லாபத்துடன் பணத்தை எடுக்கலாம் என்பது போன்ற வழிமுறைகளை கூறுகின்றனர். அவர்களின் செயலியும், தளமும் தெளிவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தளம் போலவே தோற்றமளிக்கும். அதைப்பற்றி மிகத் தெளிவாக எல்லாவற்றையும் விளக்குவார்கள். போலி பக்கத்திலும் தரவுகள் உள்ளடங்கிய டேஷ்போர்டு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பலரும் இதனை உண்மையான தளம் என்று நம்பி மோசடியாளர்களின் வழிமுறைகளின்படி பணத்தை முதலீடு செய்ய தொடங்குகின்றனர்.

குறுகிய காலத்தில் மிகப்பெரிய லாபம் மற்றும் உத்தரவாத வருமானம் தருவதாக உறுதியளிக்கிறார்கள். பங்குச்சந்தை தரகர்கள் மூலம் தங்களுக்கு ரகசியத் தகவல்கள் கிடைப்பதாகவும் நம்ப வைக்கிறார்கள். முதலீடு செய்பவர்களை நம்ப வைக்க, தொடக்கத்தில் ஒன்றிரண்டு பரிவர்த்தனைகளில் சிறிய லாபத்தை எடுக்க அனுமதிக்கிறார்கள். முதலீடு செய்வதால் பணம் வருவதாக நம்பி, மேலும் மக்கள் பணத்தை கொட்டுகின்றனர்.

சமயங்களில் அந்த சிறிதளவு பணமும் வராது. இந்நிலை தொடர்ந்து ஒரு பெரிய தொகையை முதலீடு செய்யும் வரை காத்திருக்கும் மோசடியாளர்கள், முதலீடு செய்தவர் பணத்தை எடுக்க முயற்சிக்கும் போது திடீரென மாயமாகிவிடுவார்கள். பல்வேறு காரணங்களை சொல்லி இப்போதைக்கு பணத்தை எடுக்க முடியாது என்று தடுத்துவிடுவார்கள். இவர்கள் பெரும்பாலும் டெலிகிராம் மூலமும் அல்லது சர்வதேச எண்களை பயன்படுத்தி மட்டுமே தொடர்பு கொள்வதால் மிக எளிதாக தொடர்பில் இருந்து மறைந்துவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாடிக்கையாளர் சேவை முற்றிலும் நின்றுவிடும். பயன்படுத்தி வந்த இணையதளமும் செயலியும் மூடப்பட்டுவிடும். மோசடியாளர்கள் பணத்துடன் மாயமாகிவிடுவார்கள்.

இது போன்ற வர்த்தக மோசடிகள் இந்தியாவில்தான் அதிகளவு நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிகரிக்கும் UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சி, மொபைல் பேங்கிங் பயன்பாடு மற்றும் ஆன்லைன் மூலம் எளிதாக KYC செய்யும் வசதி போன்றவை இந்த மோசடிகளுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்படுகின்றன. மக்களுக்கு சைபர் அச்சுறுத்தல்கள் குறித்தான போதுமான விழிப்புணர்வும் இல்லை.

மேலும், இதில் கவனிக்கத்தக்க முக்கியமான பிரச்னை என்னவென்றால் மிகவும் எளிதாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்களை நம்பிவிடுவதுதான். அவர்களுக்கு சில விளம்பர ஏஜென்சிகள் மூலம், விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், இன்ஃப்ளூயன்சர்கள் சிலர் விளம்பரம் செய்யப்போகும் விஷயத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் விளைவுகளை ஆராயாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தி அதை மக்களிடம் சேர்க்கின்றனர். இதனை அப்படியே நம்பும் சில பார்வையாளர்கள் அவர்கள் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்தும், போலியான தளங்களை பயன்படுத்தியும் ஆபத்தில் சிக்குகின்றனர். கிரிப்டோகரன்சி ஆசையில் பலரும் ஈர்க்கப்படுவார்கள்.

ஆனால், அது பாதுகாப்பானது இல்லை. அதில் யார் முதலீடு செய்கிறார்கள், யாருக்கு லாபம் கிடைக்கிறது என்பது போன்ற எந்த தகவலும் தெரியாது. இதனால்தான் கிரிப்டோகரன்சிக்கு இந்தியாவில் பெரும்பாலும் ஆதரவு கிடையாது. போலியான தரகர்களை நம்பியும் பலர் ஏமாறுகின்றனர். பிட்காயினை இரட்டிப்பு ஆக்குவது, கிரிப்டோ பாட்கள், மைனிங் இன்வெஸ்ட்மென்ட், ஃபாரெக்ஸ் டிரேடிங், ஃபாரெக்ஸ் ப்ராஃபிட், இன்டர்நெஷனல் டிரேடிங் ஆக்ஸஸ் போன்ற சேவைகள் செய்து தரப்படும் என்பதன் பெயரில் மோசடிகள் நடைபெறும்.

இதில் பெரும்பாலும் உள்ளூர் நபர்கள் அன்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத தரகர்கள் மூலம் மோசடி செய்யப்படுகின்றன. டெலிகிராமில் விஐபி, பம்ப் அண்ட் டம்ப் போன்ற போலியான வர்த்தகம் சார்ந்து பேசக்கூடிய குழுக்களில் இணைந்தும் மாட்டிக்கொள்கிறார்கள். இது போன்ற போலியான வர்த்தக கும்பலிடம் சிக்கும் நபர் மேலும் சில நபர்களை இணைத்துவிட்டால் அவருக்கு போனஸ் கிடைக்கும். ஆனால், அவரும் இதில் ஏமாறப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.

இது ஒரு சங்கிலியாக தொடரும். இது பாலிஸி பேஸ்டு ஸ்கேம் எனப்படுகிறது. இது போன்ற மோசடிகள் வீட்டிலிருந்தே வேலை என்கிற வகையில் ஒரு கும்பலாக ஈடுபடுகின்றனர். மோசடி செய்வதற்கு தனிநபர்களை கண்டறிந்து குறிவைக்கவும், போலியான செயலி மற்றும் வலைத்தளத்தங்கள் பற்றி விளக்குவதற்கும், தளத்தை விரிவுபடுத்தவும் என ஒவ்வொரு வேலைகளை செய்யவும் ஆட்கள் இருப்பார்கள். உளவியல் ரீதியாக கையாளுவது முதல் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் வரை நம்பகத்தன்மையை கொடுப்பார்கள், பின்னர் மாயமாகிவிடுவார்கள்.

போலி வர்த்தக மோசடிகள் தொடர்பான மிகப்பெரிய அளவில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை பார்க்கலாம். பூனேவில் 2024ம் ஆண்டு ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி மூலம் சுமார் 452 கோடி ரூபாய் பணம் ஏமாற்றப்பட்டது. வாட்ஸ்ஆப் இன்வெஸ்ட்மென்ட் குரூப், ஃபேக் டிரேடிங் ஆப், சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் இந்த மோசடி சம்பவம் நடந்துள்ளது. இதில் முக்கியமா ஐ.டி வல்லுநர்கள், இடைநிலையிலிருந்து உயர்நிலைக்கு செல்லும் தொழில் வல்லுநர்கள், உயர் பதவியிலிருந்து ஓய்வுப்பெற்ற முதியவர்கள் ஆகியோரை குறிவைக்கின்றனர். அதாவது, அதிகளவு பணபலம் உள்ள தனிநபர்களை கண்டறிவதற்கென்றே மோசடியாளர்கள் குழு அமைத்து செயல்படுகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளில் இழந்த பணத்தை மீட்பது என்பது சவாலானது. மோசடி குற்றம் கண்டறியப்பட்ட பின் மோசடியாளர்களின் வங்கி கணக்கை முடக்கும்போது எவ்வளவு பணம் இருக்கிறதோ அதை மட்டுமே மீட்க முடியும். அதுவும் அரிதாகவே நடக்கும். மோசடியாளர்கள் மொத்த பணத்தையும் எடுத்துவிட்டிருந்தால் எதுவும் திரும்ப கிடைக்காது. இதுபோல கொச்சினில் நடைபெற்ற சம்பவத்தில் போலி இணையதளம் மூலம் சர்வதேச வர்த்தக மோசடியில் 25 கோடி ரூபாய் பறிபோனது.

மேலும், தெலுங்கானாவில் முகநூல் விளம்பரங்கள் மூலம் சுமார் 94 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. போலியான விளம்பரத்தின் மூலம் அந்தக் குழுவில் நுழைந்து என்ன நடக்கிறது, யார் இதை செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்து மோசடி நடப்பதை கண்டறிந்தனர். போலியான வர்த்தக மோசடிகள் பணம் நாட்டம் உள்ள யாருக்கும் நடக்கலாம். வர்த்தகத்தில் ஈடுபடுவது தவறில்லை. ஆனால், பாதுகாப்பாக இருத்தல் வேண்டும். மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிகளை பின்பற்ற வேண்டும்.

*வர்த்தகம் செய்யும்போது எப்போதும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI, Securities and Exchange Board of India) போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட நம்பகமான தரகர்களை மட்டுமே அணுக வேண்டும்.

*அந்நிய செலாவணி (Forex) அல்லது கிரிப்டோ வர்த்தகம் என்று கூறி டெலிகிராமில் வரும் போலியான குழுக்களை நம்ப வேண்டாம்.

*இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்திற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லை என்பதால், அதில் ஏமாந்தால் சட்டரீதியான உதவி பெறுவது கடினம்.

*நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், உடனடியாக சைபர் கிரைமில் புகாரளிக்க வேண்டும். இருப்பினும், பணம் ஏற்கனவே பரிமாறப்பட்டிருந்தால் அதைத் திரும்பப் பெறுவது மிகவும் கடினம் என்பதால் வருமுன் காப்பதே சிறந்தது. பொதுமக்கள் தங்களின் முதலீடுகளை செய்யும் முன் அந்தத் தளம், செயலி மற்றும் தரகர் பற்றிய முழுமையான சட்டப்பூர்வ விவரங்களை சரி பார்ப்பது அவசியமாகும்.

(புலனாய்வு தொடரும்…)

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

Tags : Saffron ,
× RELATED பசுமை ஆஸ்கார் விருது பெற்ற இந்தியப் பெண்மணிகள்!