நெல்லை: பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் குவிந்த நிலையில், வியாபாரிகள் இறைச்சிக்காக ஏராளமான ஆடுகளை வாங்கி சென்றனர்.
இறைதூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தன் மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக பலியிட துணிந்த இப்ராஹிம் நபியின் அசைக்க முடியாத நம்பிக்கையை போற்றும் விதமாக பக்ரீத் பண்டிகையின்போது, குர்பானி (தியாகம்) கொடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆடு, மாடு போன்ற பிராணிகளை குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும் பிரித்து கொடுப்பது வழக்கம். பக்ரீத் பண்டிகையின் வரலாற்றோடு குர்பானி தொடர்புடையது என்பதால், தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் ஆடு, மாடு விற்பனை, இப்பண்டிகையை ஒட்டி அதிகளவில் நடைபெறும்.
தென்மாவட்டங்களின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக திகழும் மேலப்பாளையம் ஆட்டு, மாட்டு சந்தையில் கடந்த வாரமே நல்ல வியாபாரம் நடந்தது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படும் நிலையில், இன்று வியாபாரம் களைக்கட்டியது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, தேனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சந்தைக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. மேலப்பாளையம் சந்தையை பொறுத்தவரை உச்சபட்ச ஆடுகள் விற்பனை பக்ரீத் காலத்திலேயே நடைபெறுவது வழக்கம். அதற்கேற்ப சந்தையில் விற்பனையை இன்று காண முடிந்தது.
மேலப்பாளையம் சந்தையில் காலை நேர நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தையில் வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.3 ஆயிரம் தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை மதிப்புள்ள ஆடுகள் சந்தையில் விற்கப்பட்டன. பக்ரீத் பண்டிகையை ஒட்டி செம்மறி ஆடுகளை விவசாயிகளும், வியாபாரிகளும் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வந்தனர். எடைக்கு ஏற்ப ஆடுகளுக்கு வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். ஆடுகள் ரூ.8 ஆயிரம் தொடங்கி, ரூ.25 ஆயிரம் விலை போயின.
பக்ரீத் விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
‘‘மேலப்பாளையம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று மாடுகள் விற்பனையும், இன்று ஆடுகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதிலும் உள்ளூர் வியாபாரிகளும், கறிக்கடைக்காரர்களும் ஆடுகளை 10, 20 என மொத்தமாக வாங்கி செல்கின்றனர். வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளே அதிகம் விற்பனையாகி வருகிறது.’’ என்றனர்.
ஒரு செம்மறியாட்டின் விலை ரூ.55 ஆயிரம்
மேலப்பாளையம் சந்தையில் இன்று திருமங்கலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு செம்மறியாட்டின் விலை ரூ.55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. நல்ல திரட்சியாக காணப்பட்ட அந்த ஆட்டை பலரும் வாங்க முண்டியடித்தனர். இதுபோல் குன்னூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பூக்கிடை ஆடு ரூ.45 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பேரத்தில் இருந்தது. செங்கிடா மற்றும் கோவை செம்மறியாடுகளின் விலை ரூ.30 ஆயிரத்திற்கும் மேல் இருந்தன. நல்ல கறி நிறைந்த ஆடுகளுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

