- ஜோசப் விஜய்
- நைனார் நாகேந்திரன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- முதல் அமைச்சர்
- 3 அ.தி.மு.க
- ஜோசப்…
சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் ஜோசப் விஜய் குதிரை பேரம் பேசி, சட்டமன்றத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக தனது வலுவை நிரூபித்தார். ராஜினாமா செய்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆட்சி 10 நாட்களிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியைப்போல இருக்கிறது’ என்றும் கூறி, இதற்காகத்தான் தவெக கட்சியில் சேர்ந்தோம் என்றும் கூறியுள்ளார்கள்.
இது எவ்வளவு வேடிக்கையான, முட்டாள்தனமான பேச்சு. இவர்கள் எப்படி தலைமைச்செயலகத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர முடியும்? தலைமைச் செயலகம் என்ன தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமா? இந்த அடிப்படைக்கூட தெரியாமல் ஒரு அறிவிலி அமைச்சர் இருக்கிறாரே?.
மேலும், இன்ஸ்டாகிராம் இன்புளுவன்சர்களை வைத்து வைத்து, ஏமாற்றி, எளிதாக ஆட்சிக்கு வந்த விஜய்க்கு எப்படி அரசியல் பக்குவம் இருக்கும்? அதுமட்டுமல்லாது குதிரை பேரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்ற ஜோசப் விஜய் எப்படி தூயசக்தி ஆவார்?. ஜோசப் விஜய்யின் ஆட்சி 15 நாட்களிலே அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சியை போன்று இருக்கிறது என்று சொல்லுகிறார்களே?. 15 நாட்களில் தமிழகத்தில் நடந்த அவலங்களைப் பாருங்கள்.
ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்த 15 நாட்களில் 266 குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. 45 படுகொலைகள் நடந்துள்ளன. 66 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடந்துள்ளன. 74 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. 82 ஊழல் குற்றங்கள் நடந்துள்ளன. போதைப்பொருட்களை ஒழிப்பேன் என்று சொன்னார் ஜோசப் விஜய்.
இன்றுவரை பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறதே! அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி செய்கிறேன் என்று சொன்ன ஜோசப் விஜய் விவசாய பெருங்குடி மக்களையும் ஏமாற்றி இருக்கிறார். அவர் அறிவித்தப்படி முழுமையாக பயிர்கடன் தள்ளுபடி செய்யவில்லை. இது அவர்கொடுத்த வாக்குறுதியை மீறியதாகும்.
மேலும், கடந்த 2 நாட்களிலேயே ஜோசப் விஜய் சிறுபான்மை ஆட்சியில், திருவண்ணாமலையில் 14 வயது சிறுமி, கோவையில் 10 வயது சிறுமி, விழுப்புரம் வண்டிப்பாளையத்தில் 11 வயது சிறுமி, மதுரையில் 10ம் வகுப்பு மாணவி, நாகப்பட்டினத்தில் 80 வயது மூதாட்டி ஆகியோர் கொடூரமாக பாலியல் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லுவாரா முதல்வர்.
இவரது ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பார்த்தால், மகாகவி பாரதி பாடிய, \\”நெஞ்சுப் பொறுக்குதில்லையே – இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்\\” என்ற துயரப்பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இப்படியாக, தமிழக மக்களை வருத்தம் அடையச் செய்யும் அளவிற்கு, சிறுபான்மை அரசின் முதல்வர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஜோசப் விஜய் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடையும்படி செய்து விட்டார் என்பது வேதனைக்குரியது.
