×

ஜோலார்பேட்டையில் பயங்கரம்: போதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி பள்ளி மாணவன் பலி: தாத்தா, பேத்தி படுகாயம்: மினிவேன், 4 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதல்

 

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே காரை போதையில் 17 வயது சிறுவன் தாறுமாறாக ஓட்டியதில் மினிவேன், 4 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் பள்ளி மாணவன் இறந்தான். அவனது தாத்தாவும், சகோதரியும் படுகாயமடைந்தனர். திருப்பத்தூரில் இருந்து மது போதையில் ஒருவர் நேற்று முன்தினம் மாலை காரை தாறுமாறாக ஓட்டிக்கொண்டு ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் வழியாக வந்துள்ளான்.

அப்போது எதிரே திருப்பத்தூர் அடுத்த கூடப்பட்டு பகுதியை சேர்ந்த பெருமாள் (55) என்பவர் பைக்கில் வந்தார். அவரது பைக்கில் பேரன் மவுனிஷ்(11), பேத்தி அனுஷ்கா(17) ஆகியோர் வந்தனர். தாறுமாறாக வந்த கார், இவர்களது பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருப்பினும் கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது.

தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் ரோடு பகுதியை கடந்த அந்த கார், அவ்வழியாக வந்த மினிவேன் மற்றும் 4 பைக்குகள் மீதும் அடுத்தடுத்து மோதியபடி சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சில இளைஞர்கள் ஒன்றிணைந்து அந்த காரை விரட்டிச்சென்றனர்.

ேஜாலார்பேட்டை சிறு விளையாட்டரங்கம் அருகே அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது காரை ஓட்டிவந்தது சிறுவன் என தெரியவந்தது. அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் அந்த சிறுவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது.

சிறுவன் ஓட்டிய கார் மோதியதில் படுகாயமடைந்த தாத்தா, பேரன் மற்றும் பேத்தியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் மவுனிஷ் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து பெருமாள் மற்றும் அனுஷ்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பலியான மவுனிஷின் பெற்றோர் சென்னையில் தங்கி பானிபூரி கடை நடத்தி வருகின்றனர். மவுனிஷ் மற்றும் அனுஷ்கா கூடப்பட்டில் தாத்தா பெருமாளின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். கோடைவிடுமுறை என்பதால் பெற்றோரை பார்க்கவேண்டும் என கூறியதால் பேரன், பேத்தியுடன், தாத்தா சென்னைக்கு சென்றுவிட்டு ரயிலில் திரும்பினார். ரயில் நிலையத்தில் இருந்து பைக்கில் திரும்பிய நிலையில் கார் மோதியதில் மவுனிஷ் பலியானான்.

சிறுவன் போதையில் ஓட்டி வந்த கார் மோதி மேலும் சிலர் லேசான காயம் அடைந்திருக்கலாம். அதுதொடர்பாக புகார் வரவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கார் மோதும் சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jolarpettai ,Tirupattur… ,
× RELATED ஏற்காடு கோடை விழாவில் படகு போட்டி திடீர் ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்