×

தனியார் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்ற வாலிபர் மீது வழக்கு

 

காரைக்கால், மே 26: காரைக்காலில் தனியார் கல்லூரி மாணவியிடம் உறவுக்கார அண்ணன் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் காரைக்கால் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கமாக கல்லூரி முடிந்ததும் கல்லூரிக்கு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி காரைக்கால் எம்.ஓ.எச். நிறுத்தத்தில் இறங்கி, பிறகு அங்கிருந்து திரு.பட்டினம் பகுதிக்கு வேறொரு பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 21ம் தேதி மாலை கல்லூரி முடிந்ததும், காரைக்கால் எம்.ஓ.எச். பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து திரு.பட்டினம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது திரு.பட்டினத்தை சேர்ந்த உறவுக்காரரான அண்ணன் முறையுள்ள மூவேந்தன்(29), என்பவர் பஸ் நிறுத்தத்திற்கு சென்று மாணவியிடம் வீட்டுக்குத்தானே செல்கிறாய் நானும் அங்கே தான் செல்கிறேன் வா என பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி மாணவியும் சென்றபோது மதகடியை கடந்தவுடன், விழுதியூர் பக்கம் திரும்பியதைக் கண்டு இளம்பெண் ஏன் இந்த பக்கம் போகிறாய் என மூவேந்தனிடம் கேட்டுள்ளார். அதற்கு ஒரு பொருளை வாங்க வேண்டும் வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்று விடலாம் என மாணவியிடம் கூறி தொடர்ந்து சென்றுள்ளார். மேலஓடுதுறை தடுப்பணை அருகே சென்றபோது திடீரென மூவேந்தன் மாணவியின் மீது கை வைத்து சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதை சற்றும் எதிர்பாராத இளம்பெண் அதிர்ச்சி அடைந்து, கையைத் தட்டிவிட்டு கீழே இறங்க முயற்சித்தபோது, இறங்காதே உன்னை மதகடியில் இறக்கி விடுகிறேன் என கூறி மாணவியை மதகடியில் இறக்கி விட்டு விட்டு சென்றுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து யாரிடமும் பேசாமல் மாணவி அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர் பெண் ஒருவர் கடந்த 23ம் தேதி மாலை ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் என பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது 21ம் தேதி மாலை நடந்த சம்பவத்தை இளம்பெண் கூறியதை கேட்டு பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் மற்றும் இளம்பெண் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், மூவேந்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Karaikal ,Thirupattinam ,
× RELATED மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்