×

பல லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியும் ஆகாயத்தாமரையால் சூழ்ந்த மூலிக்குளம்

 

திருப்பூர், மே 26: திருப்பூர் அருகே உள்ள மூலிக்குளத்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து தூர்வாரியும் மீண்டும் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. எனவே, இதை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மூலிக்குளம். தற்போது போதிய பராமரிப்பு இல்லாததால் ஆகாயத்தாமரைகள் மற்றும் சருகுகள் மண்டி காணப்படுகிறது. அணைக்காடு பகுதியில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இந்த குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் முக்கிய வாய்க்காலும் முறையான பராமரிப்பின்றி உள்ளதால், குளத்திற்கான நீர் வரத்தும் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இந்த மூலிக்குளம் தூர்வாரப்பட்டது. குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பிரத்யேக நடைபாதைகளும், சுற்றிலும் மின்விளக்கு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், தூர் வாரப்பட்ட சில மாதங்களிலேயே இந்த நீர்நிலையை முறையாக பராமரிக்க தவறியதன் காரணமாக குளத்தின் பெரும்பகுதி தற்போது ஆகாயத்தாமரை கொடிகளாலும், காய்ந்த மரச்சருகுகளாலும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

தண்ணீரே வெளியே தெரியாத அளவிற்கு பச்சைக்காடு போல் காட்சியளிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட நடைபாதைகளும், முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில்உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும்போது சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சீராக இருக்கும்.

ஆனால், தற்போது ஆகாயத்தாமரைகள் பெருமளவில் அதிகரித்து காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், காலை மற்றும் மாலையில் நடைபயிற்சி செய்ய முடியாத அவல நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்கள் இதனை மீண்டும் பயன்படுத்த ஏதுவாக மாற்றுவதோடு, திருப்பூர் மாநகராட்சி சார்பில் இந்த குளத்தை இனிவரும் காலங்களில் முறையாக பராமரிக்க வேண்டும். அத்துடன் சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்’’ என்றனர்.

 

Tags : Mulikkulam ,Tiruppur ,Uthukuli… ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்