சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு குரூர மனம் படைத்த கயவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 35 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்பும் காட்சிகள் மாறாமல் அடிக்கடி அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைத் தடுக்க முதலமைச்சர் விஜயால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பாட்டிற்கு வராமல் பெயரளவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, மாற்றுத்திறனாளி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் விரைந்து கைது செய்து கடுமையான தண்டனையை வழங்குவதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
