×

திருவொற்றியூரில் தொடர்ந்து மின்தடை: மக்கள் கடும் அவதி; போராட முடிவு

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் மணலி ஆகிய இடங்களில் சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால் முதியவர்கள் மற்றும் நோயாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்தடை பிரச்னையை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் மின்சார வாரிய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில், திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கடந்த ஒரு வாரமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தெருமுனையில் நின்று மின்சார வாரியத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு மின்சார வாரிய ஊழியர்கள் வந்து மின்தடை பிரச்னையை சரி செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’சில தினங்களாக எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் தூங்க முடியாமல் வெளியே வந்து அமர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் செய்தால் உடனே வருவதில்லை. ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று கூறுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற நிலை நீடித்து வருவதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை நீடித்தால் அனைவரும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Tags : Thiruvotiyur ,Chennai ,Tolur ,Manali ,
× RELATED சென்னையில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை.. நான்கு பேர் கைது