×

சென்னை விமான நிலையத்தில் டிராலியில் லக்கேஜ்களை தள்ளிச்செல்ல மூத்த தம்பதியிடம் கூடுதல் பணம் வசூல்: தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் மூத்த தம்பதியிடம் கட்டாய பண வசூல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு, வருகை பகுதிகளில் உள்ளே செல்லும் பயணிகள், விமானங்களில் வந்து இறங்கி வெளியே வரும் பயணிகள், முதல் விமானப்பயணம் அல்லது மூத்த வயதான பயணிகள் போன்றவர்களுக்கு கட்டணங்கள் வசூலித்து, உதவி செய்வதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனம், சென்னை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

அதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஒவ்வொரு டிராலி பயணிக்கும் ரூ.500 கட்டணமாக வசூலித்து, அதற்கு ரசீதும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரூ.500 கட்டணம் ரசீது கொடுத்துவிட்டு, மேலும் அதிக பணம் கேட்டு, வற்புறுத்தி வருவதாக பல்வேறு புகார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு வந்தன.  இதையடுத்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு, புதிய ஒப்பந்த நிறுவனம் ஒன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.

அதோடு பயணிகளிடம் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு மேல் வசூலிக்க கூடாது என்று கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போதும், அதேபோல் பயணிகளிடம் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இது சம்பந்தமாக பாதிக்கப்படும் பயணிகள், சமூக வலைதளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்த மூத்த தம்பதி பயணிகள் தங்களுடைய டிராலி லக்கேஜ்களை வெளியில் தள்ளிக்கொண்டு சென்று விடுவதற்கு, அந்த தனியார் சேவை அமைப்பு ஊழியர்களை நாடி உள்ளனர்.

அவர்கள் இரண்டு டிராலிகளுக்கு ரூ.1,000 கட்டணம் வாங்கிவிட்டு, அதற்கு ரசீதும் கொடுத்திருக்கின்றனர். ஆனால் இது அலுவலகத்துக்கான பணம். எங்களுக்கு நீங்கள் தனியாக மேலும் ரூ.1,000 தர வேண்டும் என்று பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்தபோது, அப்படி என்றால் நாங்கள், டிராலியை வெளியில் தள்ளிக் கொண்டு வர மாட்டோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் அந்த மூத்த தம்பதி வேறு வழியில்லாமல், கூடுதல் பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மூத்த தம்பதியினர், தங்களுக்கு சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து, இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவற்றுக்கு, ஆன்லைன் மூலமாக புகார்களை தெரிவித்துள்ளனர். ஆனால் உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆன்லைன் மூலமாக, தங்களுடைய புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

அதன் பின்பு சம்பவம் நடந்த தேதி, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், போர்டிங் பாஸ் போன்றவைகளுடன், விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி ஆன்லைன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூத்த தம்பதியினர் விடாப்பிடியாக தொடர்ந்து புகார் செய்ததின் பேரில், தற்போது இதேபோல் கூடுதல் கட்டணம் கேட்டு, கட்டாயமாக வசூல் செய்த அந்த ஒப்பந்த தொழிலாளர்கள் இருவரும், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் இதை போல் மூத்த குடிமக்கள், புதிதாக விமான பயணங்கள் மேற்கொள்பவர்கள், மாற்றுத்திறனாளி பயணிகள் உள்ளிட்டோர் பெரிதும் அவதி அடைந்து வருகிறது வழக்கமாகி கொண்டு வருகிறது. குறிப்பாக மூத்த வயதான பையன், மாற்றுத்திறனாளி பயணி போன்றோர்கள், வீல் சேர் வசதிகளை கேட்டுப் பெறுகின்றனர். அந்த வீல் சேர் பயணிகளிடமும், கூடுதல் கட்டணங்கள் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதேபோல் பயணிகளிடம் கூடுதல் கட்டணங்கள் கட்டாயமாக வசூலிப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். விமானங்களில் வரும் பயணிகள் ஒவ்வொருவரும், இதுபோல் புகார்களை தெரிவித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். எனவே அதற்கு தகுந்தார் போல் விமான நிலைய நிர்வாகம் பயணிகளின் வசதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

Tags : Chennai Airport ,Chennai ,Chennai International Airport ,
× RELATED அண்ணா அறிவாலயத்தில் Gen Z திமுக என்னும்...