×

போலி ஹால் டிக்கெட், ரூ. 2 லட்சம், மின்னணு சாதனங்களுடன் எம்பிபிஎஸ் மாணவன் தலைமையிலான கும்பல் சிக்கியது எப்படி? – பல மாநிலங்களில் போலி தேர்வர்கள் தேர்வை எழுதியதால் அதிர்ச்சி

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எம்பிபிஎஸ் மாணவன் தலைமையிலான கும்பலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பல மாநிலங்களில் போலி தேர்வர்கள் மூலம் பலர் தேர்வு எழுதியுள்ளதால் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் 22 லட்சம் மருத்துவப் படிப்பு ேதர்வர்கள் இளநிலை நீட் தேர்வை எழுதினர். இந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், ராஜஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. தேர்வு நடப்பதற்கு 15 நாட்கள் முதல் ஒரு மாதத்திற்கு முன்பே சுமார் 410 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் மாணவர்களிடையே கசிந்து சுழற்சியில் இருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக வேதியியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட 120 கேள்விகள் அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போயுள்ளன. இந்த கசிந்த வினாத்தாள் நகல்கள் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாள் 30 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக பீகார் மாநிலம் நாளந்தாவில் கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரண்டு வாகனங்களை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து வாகனத்தில் இருந்த 2 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அதில் பயணம் செய்த 3 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பிடிபட்டவர்களில் முதன்மையானவர் அவதேஷ் குமார் (2ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்) என்பது தெரியவந்தது. அவருடன் இருந்த அமன் குமார் சிங் மற்றும் பங்கஜ் குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

மறுநாள் காலையில் இவர்களிடம் இருந்த செல்போன்களை ஆய்வு செய்தபோது, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான போலி ஹால் டிக்கெட்டுகள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவரங்கள் கண்டறியப்பட்டன. உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக ‘சால்வர்’ எனப்படும் போலி நபர்களை தேர்வு அறைக்கு அனுப்பி தேர்வு எழுத வைக்க இவர்கள் வியூகம் வகுத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. கைதான மருத்துவ மாணவர் அவதேஷ் குமார், இந்த கும்பலின் முக்கிய தலைவனாக செயல்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து ராஜ்கிர் டிஎஸ்பி சுனில் குமார் சிங் கூறுகையில், ‘மே 3ம் தேதி நீட் தேர்வு என்பதால் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்த சோதனையின் போது பிடிபட்ட நபர்களின் செல்போன் ஆதாரங்கள் மூலம் அவர்கள் தேர்வு மையங்களுக்கு போலி ஆட்களை அனுப்ப முயன்றது உறுதியானது. சரியான நேரத்தில் போலீசார் செயல்பட்டதால் அந்த கும்பலால் தேர்வு மையங்களுக்குள் நுழைய முடியவில்லை. தற்போது இந்த மோசடி கும்பலின் பின்னணியில் உள்ள மூளையாக செயல்பட்ட நபர் யார் என்பதை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். மேலும் பல்வேறு தேர்வு மையங்களில் தொடர்புடைய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

வினாத்தாள் கசிந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதன் மீதான விசாரணையை சிபிஐ வசம் ஒன்றிய அரசு ஒப்படைத்தது. இதனைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பொதுத் தேர்வு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச் சதி, ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம் மற்றும் சாட்சியங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ராஜஸ்தான் சிறப்பு விசாரணை குழு கொடுத்த தகவலின் படி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் சுபம் கைர்னர் (30) என்பவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கேரளாவில் மருத்துவம் பயிலும் சுருவைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமிருந்து இந்த வினாத்தாள் கசிவு தொடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அங்கிருந்து சீகரில் உள்ள பயிற்சி மைய விடுதி நடத்துநர் மூலமாக பயிற்சி மைய நெட்வொர்க் வழியாக வினாத்தாள் பரப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த விவகாரத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த கும்பல்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளதை சிபிஐ அதிகாரிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதால், நேற்று நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அது பொதுமக்களின் நம்பிக்கைக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 22.79 லட்சம் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி அடுத்த 7 முதல் 10 நாட்களில் அறிவிக்கப்படும். மறுதேர்வுக்கு மாணவர்கள் மீண்டும் பதிவு செய்யவோ அல்லது கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. அவர்களுக்குப் புதிய ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை இயக்குனர் அபிஷேக் சிங் இதுகுறித்து கூறுகையில், ‘மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம், முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் 5ஜி ஜாமர்கள் போன்ற புதிய வியூகம் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஒன்றிய அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Tags : Rs ,MBPS ,New Delhi ,CBI ,NEET ,
× RELATED நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது..!!