சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பிற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் மக்களை குளிர்விக்கும் வகையில் தமிழகத்தின் பல்ேவறு பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நேற்று அதிகாலையில் திடீரென மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வெயிலை பார்க்க முடியாத நிலை தான் இருந்தது. தொடர்ந்து மதியம் சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி.நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை காண முடிந்தது. இந்த நிலையில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. மேலும் சுமார் 1.5 மீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கனமழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். வரும் 12 மற்றும் 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்
14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்கள். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேத்தில் கரூர் மாவட்டம் குளித்தலை ஏஆர்ஜியில் 14 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குளித்தலை 10 செ.மீ. ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 9 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
