நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறை இடையில் தனியார் கப்பல் நிறுவனத்தின் சார்பில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் காலை 8 மணியளவில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு இலங்கை சென்றது.
பின்னர் மதியம் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகப்பட்டினத்திற்கு கப்பல் புறப்பட்டது. அப்போது கல்லார் கிழக்கே 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் வந்த போது திடீரென கப்பல் இன்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து கப்பல் நங்கூரம் இட்டு நடுக்கடலில் நிறுத்தப்பட்டது.
இன்ஜினை சரி செய்ய முடியாததால் 6 மணி நேரத்திற்கும் மேலாக கப்பலிலேயே பயணிகள் இருந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல் கேப்டன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மீனவர்கள் 2 விசைப்படகுடன் அங்கு விரைந்தனர். பின்னர் கப்பலை கயிறு கட்டி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர்.
இதனால், மாலை 5 மணிக்கு வர வேண்டிய இந்த கப்பல் 6 மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தது. கப்பலில் மயங்கிய பயணிகளுக்கு ஆம்புலன்சில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதனால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று அதிகாலை 1 மணி வரை பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 142 பயணிகளும் முழு பரிசோதனைக்கு பின் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
