×

சபரிமலை கோயிலுக்கு அருகே தாழ்வாகப் பறந்த கடலோர காவல் படை ஹெலிகாப்டரால் பரபரப்பு: போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்கு மிக அருகே கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் 4 முறை தாழ்வாக வட்டமிட்டு பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பம்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் இருக்கும் பகுதி அதி பாதுகாப்பு மிகுந்த இடமாகும். கோயிலுக்கு அருகே டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை தரிசனத்திற்கு விஐபிக்கள் வந்தால் அவர்களது ஹெலிகாப்டர்கள் நிலக்கல் வரை செல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு.

கடந்த வருடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வந்தபோது ஹெலிகாப்டர் இறங்குவதற்காக நிலக்கல்லில் பிரத்தியேகமாக ஒரு ஹெலிபேட் அமைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் ஜீப் மூலம் சன்னிதானத்திற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சபரிமலை கோயிலின் மிக அருகே கடலோர காவல்படைக்கு சொந்தமான சேட்டக் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது. நான்கு முறை இந்த ஹெலிகாப்டர் கோயிலை வட்டமிட்டு பறந்தது. இதனால் கோயிலில் இருந்த ஊழியர்கள் பீதியடைந்தனர். மேலும் ஹெலிகாப்டரில் இருந்த சிலர் சபரிமலை கோயிலை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்கள் சபரிமலை கோயில் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், அதி பாதுகாப்பு மிகுந்த சபரிமலை கோயில் அருகே கடலோர காவல்படை ஹெலிகாப்டர் பறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சபரிமலை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான ஏடிஜிபி ஸ்ரீஜித்துக்கு உத்தரவிட்டது.இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பம்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் காலநிலை மோசமாக இருந்ததால் திசை மாறி தங்களது ஹெலிகாப்டர் சபரிமலை கோயில் அருகே சென்றதாகவும், இதில் வேறு எந்த காரணமும் இல்லை என்று கடலோர காவல்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coast ,Sabarimala temple ,Thiruvananthapuram ,Pampa police ,Sabarimala Ayyappa temple ,
× RELATED சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை...