ஜான்ஜ்கிர்: சட்டீஸ்கரில் காங்கிரஸ் பிரமுகரின் 19 வயது மகன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கரின் ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் பிர்ரா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கர்ஹி கிராமத்தில் வசித்து வருபவர் சம்மேலால் காஷ்யப். சிமெண்ட், மணல் வியாபாரியான இவர், காங்கிரஸ் தொகுதியின் முன்னாள் துணை தலைவர். இவரது மகன்கள் ஆயுஷ் காஷ்யப்(19), அசுதோஷ் காஷ்யப்(16).
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சம்மேலால் காஷ்யப்பின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு தூங்கி கொண்டிருந்த ஆயுஷ் காஷ்யப், அசுதோஷ் காஷ்யப் ஆகியோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மார்பில் பலத்த காயமடைந்த ஆயுஷ் காஷ்யப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கையில் காயமடைந்த அசுதோஷ் காஷ்யப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி அருகிலுள்ள மாவட்ட காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
