×

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 3 குற்றவாளிகளுக்கும் 95 ஆண்டு சிறை: உடந்தையாக இருந்த தாய்க்கும் 95 ஆண்டு சிறை

சிவகங்கை: 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 குற்றவாளிகளுக்கும் 95 ஆண்டு சிறை தண்டனை, உடந்தையாக இருந்த தாய்க்கு 95 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி சிவகங்கை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரைச் சேர்ந்தவர் அக்பர் அலி (71), புதுக்கோட்டை மாவட்டம் அழகியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (55), அரியலூரைச் சேர்ந்தவர் சரவணன் (41). இவர்கள் மூவரும் கடந்த 2021ல் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, சம்பவம் குறித்து தோழியிடம் தெரிவிக்க, அவர் குழந்தைகள் நலக்குழுவினரிடம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகள் நலக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் அக்பர் அலி அம்பலம், முருகேசன், சரவணன், சிறுமியின் தாய் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கோகுல் முருகன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், ‘குற்றஞ்சாட்டப்பட்ட அக்பர் அலிக்கு 50 ஆண்டு சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம், முருகேசனுக்கு 25 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம், சரவணனுக்கு 20 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 95 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் மற்ற இருவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Sivaganga ,Sivaganga POCSO court ,Sivaganga district ,
× RELATED தேர்தலை ஒட்டி ரூ.2,000, ரூ.10,000 செக்...