×

கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா: தல்லாகுளம் கோயிலில் நடந்தது

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரை பெருந்திருவிழாவிற்கு கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பெருமாள் கோயிலில் இன்று காலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை அருகே, அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இதற்காக மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி இந்தாண்டு திருவிழாவிற்கு தல்லாகுளம் கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதையொட்டி பூதேவி, ஸ்ரீதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாளுக்கு விசேஷ பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 7.55 மணியளவில் மேளதாளம் முழங்க நூபுரகங்கை தீர்த்த அபிஷேகத்துடன் கோயில் உள்பிரகாரத்திலும், ராஜகோபுரம் முன்பும் மாவிலை, பூமாலைகளால் இணைக்கப்பட்ட முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக அழகரின் ஆயிரம் பொன்சப்பரத்தில் இணைப்பதற்காக யாழி திருமுகத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து வைகை ஆறு தேனூர் மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடும்விழா நடைபெற்றது. இதில், கள்ளழகர் கோயில் இணை ஆணையர் ஹரிஹரன், கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், ரம்யா சுபாஷினி, பிஆர்ஓ முருகன், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றியதை தொடர்ந்து அழகர்கோயிலில் இருந்து வண்டியூர் வரை அழகர் எழுந்தருளும் மண்டகப்படிகள் முன்பாக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.

சித்திரை திருவிழா ஏப்.27ல் துவக்கம்:
கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.27ம் தேதி மாலை சுந்தரராஜ பெருமாளுக்கு காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. அன்று மாலை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏப்.29ம் தேதி மாலை கள்ளழகர் பெருமாள் தங்கப்பல்லக்கில் பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று வாணவேடிக்கையுடன் மதுரைக்கு புறப்படுகிறார். ஏப்.30ம் தேதி காலை மூன்றுமாவடியில் எதிர்சேவை, முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி காலையும், 2ம் தேதி தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளல், 3ம் தேதி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூபல்லக்கில் எழுந்தருளல், மே 4ம் தேதி அதிகாலை சேதுபதி மண்டபத்தில் இருந்து கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் கோயிலுக்கு புறப்படுதல், மே 5ம் தேதி காலை 11.40 மணிக்கு இருப்பிடம் சென்றடைதல் ஆகியவை நடைபெறுகிறது. மே 6ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags : Muhurtakal ,Kallaghar Temple Chitra Festival ,Dallakulam Temple ,Madurai ,Khatkai Muhurtakal ,Kallahagar Temple ,Chitrai Perumal Temple ,Dallakulam Perumal Temple ,Chitra Paruntha Festival ,Kallaghar Temple ,Ahagargoville ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா வந்த வேன்...