சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி மூலம் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; 2024 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவே வாக்களித்தனர். திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெற்றது; பாஜக கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை. அரசியல் சாசனத்தைத் திருத்த பாஜகவிற்குப் போதிய பலம் இல்லை என்று மக்கள் நம்பினர். மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, இரண்டு ஆண்டுகள் கழித்து அரசியல் சாசனத்தைத் திருத்த அரசு முயன்றது.
இந்தியா (INDIA) கூட்டணி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் ஒருங்கிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடித்தனர். இதன் மூலம் அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனம் காப்பாற்றப்பட்டுள்ளது.இந்த மசோதா நிறைவேறியிருந்தால் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும். வக்ஃபு சட்டம் மற்றும் FCRA (Foreign Contribution Regulation Act) சட்டங்களில் மாற்றங்கள் வந்திருக்கும். மக்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்துரிமை நசுக்கப்பட்டிருக்கும். தொடர்ச்சியாக மேலும் பல அரசியல் சாசனத் திருத்தங்கள் செய்ய வழிவகுத்திருக்கும் என்று கூறினார்.
