×

சோழன்திட்டை அணையில் இருந்து தண்ணீர் சுசீந்திரம் தெப்பகுளம் வாய்க்காலில் உள்ள அடைப்பு சரிசெய்யும் பணி

நாகர்கோவில்: சுசீந்திரம் தெப்பகுளத்திற்கு சோழன்திட்டை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்யும் பணி நடந்தது. சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோயில் தெப்பகுளத்தில் இடிந்த மதில்சுவர் மற்றும் மையமண்டபம் சீரமைக்கும் பணி ரூ.1 கோடியே 43 லட்சம் செலவில் தொடங்கியது. பழமை மாறாமல் மதில்சுவர் அமைக்கும் பணியும், மையமண்டபம் சீரமைக்கும் பணியும் வேகமாக நடந்து வந்தது. சித்திரைமாத தெப்பதிருவிழா தொடங்குவதற்கு முன்பு பணியை முடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இந்தநிலையில் சீரமைக்கும் பணி கடந்த 2 தினங்களுக்கு முன்பு முடிவு அடைந்தது. இந்த நிலையில் தெப்பதிருவிழா நாளை(18ம் தேதி) தொடங்குகிறது. தெப்பவிழா வருகிற 27ம் தேதி நடக்கிறது. தெப்பவிழாவிற்கு தேவையான தண்ணீர் சுசீந்திரம் பழையாற்றில் இருந்து எடுக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது கோடைகாலம் என்பதால், ஆற்றில் குறைவான தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால், தெப்பகுளத்திற்கு வரும் மடைவழியாக தண்ணீர் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சோழன்திட்டை அணையில் இருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்து கொண்டுவரமுடிவு செய்யப்பட்டது. அதன்படி இரண்டு பெரிய மோட்டார் மூலம் அணையில் இருந்து தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு, தெப்பகுளத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, பணிகள் இரவு பகல் பாராமல் நடந்து வருகிறது. சோழன்திட்டை அணையில் இருந்து தெப்பகுளத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் வந்தது. தண்ணீர் கொண்டுவரும் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை அறிந்த அறநிலைத்துறை அதிகாரிகள், அந்த அடைப்பை எடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான அடைப்பை எடுக்கும் வாகனத்தை வரவழைக்கப்பட்டு, தெப்பகுளத்திற்கு வரும் வாய்க்காலில் உள்ள அடைப்பை எடுக்கும் பணி நடந்தது. தெப்பவிழாவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தெப்பகுளத்தை நிரப்ப போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Suchindram Theppakulam ,Cholanthittai dam ,Nagercoil ,Suchindram Thanumalaiyanswamy Temple Theppakulam ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா வந்த வேன்...