×

7 ஆபத்தான நாட்கள் – தாய்லாந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை இப்படி குறிப்பிட காரணம் என்ன?

பாங்காக்: ஒரு நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தை அந்த நாட்டு அரசாங்காமே ஆபத்தான நாட்கள் என்று அடையாளப்படுத்துவது சற்று வியப்பாக இருக்கலாம். ஆனால் தாய்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் இதுதான் நிதர்சனம் . உலகின் மிகப்பெரிய தண்ணீர் போர் என்று வர்ணிக்கப்படும் சோங்க்ரான் (Songkran) பண்டிகை இந்த ஆண்டும் உயிர் இழப்புகளுடன் தொடங்கி இருப்பது அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமஸ்கிருதத்தில் சங்கராந்தி என்ற சொல்லில் இருந்து உருவான இந்த சோங்க்ரான் (Songkran) சூரியன் மேஷராசிக்குள் நுழைவதை அடிப்படையாக கொண்டது. இந்தியாவில் நாம் கொண்டாடும் மகர சங்கராந்தி மற்றும் உத்தராயணம் பண்டிகைகளின் வேர்களை கொண்டது. கடந்த கால கசப்புகளை தண்ணீரில் கழுவி துடைத்துவிட்டு தூய்மையுடன் புதிய ஆண்டை வரவேற்பது தான் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம்.

இதற்காக மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்தும் குடும்பத்துடன் புத்தர் கோயிலுக்கு சென்றும் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பாங்காக் போன்ற நகரங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒரே நேரத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் அளவு அதிகரிக்கிறது.

இந்த ஒருவார காலத்தை தான் தாய்லாந்து அரசு 7 ஆபத்தான நாட்கள் என குறிப்பிடுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 13ல் தொடங்கிய இந்த திருவிழாவில் முதல் மூன்று நாட்களில் மற்றும் சுமார் 951 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 191 பேர் உயிர் இழந்துள்ளனர் மற்றும் 915 பேர் காயமடைந்துள்ளனர். புள்ளிவிவரங்களின் படி திருவிழாவின் முதல் நாளிலேயே 51 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்த விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணங்களை ஆராய்ந்தால் 42% விபத்துகள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும் 27.4% விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியதாலும் நிகழ்ந்துள்ளன.

மேலும், தலைக்கவசம் அணியாதது போன்று ஆபத்தான பழக்கங்களும் மரண எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. தாய்லாந்து பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு துறை வெளியீட்டுள்ள தகவலின் படி மாலை 03:01 மணி முதல் 6:00 மணி வரையிலான நேரமே மிகவும் விபத்துகள் நிறைந்த நேரமாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் நாடுகளில் தாய்லாந்து மிக மோசமான இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சாதாரண நாட்களில் கூட ஒருநாளைக்கு சராசரியாக 38 பேர் சாலை விபத்துக்களில் பலியாவதாக சாலை விபத்து பாதிக்கப்பட்டவர் பாதுகாப்பு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த விபத்து செய்திகளுக்கு இடையிலும் சோங்க்ரான் (Songkran) பண்டிகை தாய்லாந்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது. இந்த ஆண்டில் சுமார் 5 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ள நிலையில் இதன் மூலம் சுமார் 30.4 பில்லியன் பாட் அதாவது 940 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக ஏழு சுற்றுலா பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கொண்டாட்டங்களின்போது ஏற்படும் சிறு கவனக்குறைவு மிகப்பெரிய சோகத்தில் முடிகிறது என்பதற்கு இந்த ஆண்டு சோங்க்ரான் (Songkran) நிகழ்வுகள் ஒரு சான்றாக அமைந்துள்ளன.

Tags : Thai New Year ,Bangkok ,New Year ,Thailand ,
× RELATED டெல்லி ஆளுநரை பாராட்டிய டிரம்ப்