வாஷிங்டன்: சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல விஷயங்கள் இயல்பான சூழலை சீர்குலைத்து உள்ளன.
இந்த மாதிரியான சூழலில் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய 2 நாடுகளுக்கு இடையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது உலக நாடுகளிடையே கவனம் பெற்றுள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா, வெனிசுலா நாட்டினுள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்தியது.
வெனிசுலாவை தொடர்ந்து அமெரிக்காவின் குறி கியூபா மீது தான் என்று பல தகவல்கள் வெளியான நிலையில், ஈரான் நாடு டிரம்ப்பின் முக்கிய இலக்காக மாறியது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது இடைக்கால போர்நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது.
இந்த நிலையில் முன்னர் வெளியான தகவல்களின்படி அமெரிக்க அதிபரின் கவனம் தற்போது கியூபா பக்கம் திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையை கியூபா மீது எடுக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. அதிபர் உத்தரவிட்டால் அடுத்த நொடியே கியூபா மீது தாக்கல் நடத்த அமெரிக்க ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் வெனிசுலாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின் வரிசையில், “அடுத்தது கியூபா தான்” என்று அதிபர் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 2026 முதல் அமெரிக்காவால் அமல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் தடையின் காரணமாகவும், பிற காரணங்களாலும், கியூபா தற்போது கடுமையான எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2026-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தி உள்ளது, இதனால் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்து உள்ளது. மேலும் கியூபாவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் கியூபாவிற்கு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வருகிறது. அதே சமயம் பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளும் ஒருபக்கம் நடந்து வருகின்றன.
