- ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்
- விருதுநகர்
- Srivilliputur
- மகாராஷ்டிரா போலீஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
விருதுநகர்/ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.16: விருதுநகரில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மகாராஷ்டிரா போலீசார் 75 பேர் நேற்று துப்பாக்கியுடன் அணி வகுப்பில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தியும் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர், அனைத்து தொகுதிகளிலும், கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பாதுகாப்பு பணிகளுக்காக விருதுநகருக்கு ஏற்கனவே 100 ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இந்த நிலையில் மகராஷ்டிரா ஆயுதப்படையை சேர்ந்த 2 எஸ்ஐ தலைமையில் 73 போலீசார் விருதுநகர் வந்தனர். விருதுநகர் ஊரக காவல் ஆய்வாளர் லெட்சுமி லதா தலைமையில் மகாராஷ்டிரா ஆயுதப்படை போலீசார் 75 பேர் துப்பாக்கி ஏந்திய படி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருந்து தலைமை போஸ்ட் ஆபீஸ் அலுவலகம், பாண்டியன் நகர் தேவர் சிலை, அண்ணாநகர், கேகேஎஸ்எஸ்என் நகர், காந்தி நகர் முதலான பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் விருதுநகர் காவல் நிலைய போலீசாரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் நகர் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, கிருஷ்ணன் கோயில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் மகாராஷ்டிரா போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்த அணி வகுப்பு நகரின் பல்வேறு வீதிகள் வழியாக வந்து நிறைவடைந்தது. இந்த அணி வகுப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.
