- சர்வதேச நாணய நிதியம்
- உலக வங்கி
- வாஷிங்டன்
- அனைத்துலக நிதியம்
- சர்வதேச எரிசக்தி நிறுவனம்
- IEA
- தாழ்வாரம்
- மத்திய கிழக்கு
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர்ச் சூழலால், உலகளவில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே நீடிக்கக் கூடும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) ஆகியவை எச்சரித்துள்ளன. மத்திய கிழக்கு போரினால் ஏற்படும் எரிசக்தி மற்றும் பொருளாதார தாக்கங்களை கூட்டாக எதிர்கொள்ள, இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருபகுதியாக சர்வதேச எரிசக்தி முகமை, சர்வதேச நிதியம், உலக வங்கி குழுமம் ஆகியவற்றின் தலைவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டனில் சந்தித்து பேசினர்.
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கம் மிகக் கணிசமானதாகவும், உலகளாவியதாகவும், மிகவும் சமச்சீரற்றதாகவும் உள்ளது. குறிப்பாக, எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளையும், அதிலும் குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளையும் இது சராசரியை தாண்டி அதிகமாக பாதிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வழக்கமான கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கினாலும் கூட, முக்கிய பொருட்களின் உலகளாவிய விநியோகம் போருக்கு முந்தைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் பிடிக்கும்.
இத்துடன், மத்திய கிழக்கில் உள்ள சில எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடுகளில் உள்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொள்ளும் போது, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் நீண்ட காலத்திற்கு உயர்வாகவே நீடிக்கக் கூடும். இந்த போர் மக்கள் இடம்பெயர நிர்பந்தித்துள்ளது. வேலைவாய்ப்புகளையும், சுற்றுலா துறையையும் பாதித்துள்ளது. இந்த நிலைகள் சீரடைய சிறிது காலம் ஆகலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
