×

தொழிலாளர்கள் போராட்டம் நொய்டாவில் மீண்டும் வன்முறை கல்வீச்சு; வாகனங்கள் சூறையாடல்: 300 பேர் அதிரடி கைது

நொய்டா: உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ள 21 சதவீத சம்பள உயர்வு போதாது எனக் கூறி நொய்டா தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. உத்தரபிரதேச மாநிலம், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வுக் கோரி போராட்டத்தில் குதித்தனர். 3 நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.

போராட்டக்காரர்கள் தொழிற்சாலைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், போலீஸ் வாகனங்கள் உட்பட ஏராளமான வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த மோதலில் போலீசார், தொழிலாளர்கள் என பலர் காயம் அடைந்தனர்.
வன்முறை தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளதாகவும், 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கவுதம் புத்த நகர் போலீஸ் கமிஷனர் லட்சுமி சிங் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்ட மேலும் வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து, தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 21 சதவீத ஊதிய உயர்வை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்தது. எனினும் அரசு அறிவித்துள்ள 21 சதவீத சம்பள உயர்வு போதாது எனக் கூறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் கல்வீச்சு, தொழிற்சாலை கண்ணாடிகள் உடைப்பு மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. எனினும், அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

* கூலித் தொழிலாளிகள் மீது வர்த்தக்க போரின் சுமை: ராகுல் குற்றச்சாட்டு
நொய்டா போராட்டம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகள், உலகளாவிய பணவீக்கம் மற்றும் சீர்குலைந்த விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் ஏற்படும் சுமை, மோடியின் தொழிலதிபர் நண்பர்கள் மீது விழவில்லை. அந்தச் சுமையின் மிகக் கடுமையான தாக்கம், அன்றாடக் கூலித் தொழிலாளியின் மீதுதான் நேரடியாக விழுந்துள்ளது. அதாவது, அன்றைய உணவைச் சம்பாதிப்பதற்காகவே தினமும் உழைக்க வேண்டிய நிலையில் உள்ள தொழிலாளியின் மீது விழுந்துள்ளது.

ந்தவொரு போரிலும் எவ்வித பங்கும் வகிக்காத, எந்தவொரு கொள்கையையும் வகுக்காத, வெறுமனே தன் வேலையை மட்டும் செய்துவந்த ஒரு தொழிலாளி அவர். அமைதியாக. எந்தப் புகாரும் இன்றி. அத்தகைய தொழிலாளி, தனக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளைக் கோரும்போது, அதற்குப் பதிலாக அவருக்கு என்ன கிடைக்கிறது? வற்புறுத்தலும் ஒடுக்குமுறையும்தான். இந்த நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளியுடனும் தான் துணை நிற்கிறேன். இந்தத் தொழிலாளர்களைத்தான் மோடி அரசாங்கம் தற்போது ஒரு சுமையாகக் கருதத் தொடங்கியுள்ளது.

* பாகிஸ்தானின் சதி
இந்த வன்முறை குறித்து உத்தரப்பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அனில் ராஜ்பர் கூறுகையில், ‘நொய்டா போராட்டம் திட்டமிடப்பட்ட சதியாகும். சமீபத்தில் மீரட் மற்றும் நொய்டாவில் பாகிஸ்தான் தொடர்புள்ள பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு, இந்த வன்முறையிலும் பாகிஸ்தான் சதி இருக்கிறதா என்று விசாரணை நடத்தப்படுகிறது’ என்று கூறினார்.

Tags : Noida ,Uttar Pradesh government ,Gautam Buddha Nagar district ,Uttar Pradesh ,
× RELATED நீண்ட காலத்திற்கு எரிபொருள், உர...