அல்ஜியர்ஸ்: ஈரான் போர் தொடர்பாக அமெரிக்காவில் பிறந்தவரான போப் 15ம் லியோவுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. தீவிர இடதுசாரிகளுக்கு சேவை செய்வதை நிறுத்த வேண்டுமென போப்பை விமர்சித்த அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை ஆதரிக்கும் போப் தங்களுக்கு தேவையில்லை என்றார். நற்செய்தி புத்தகத்தில் கூறப்பட்டபடியே அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுகோள் விடுப்பதாக கூறிய போப் லியோ, டிரம்பை பார்த்து பயமில்லை என்றார்.
இந்நிலையில், தனது 11 நாள் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக அல்ஜீரியா சென்ற போப் லியோ, அல்ஜியர்சில் தியாகிகள் நினைவிடத்தில் பல்லாயிரம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், ‘‘ஒவ்வொரு தேசத்திற்கும் கடவுள் அமைதியை விரும்புகிறார். அந்த அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல.
அது நீதி மற்றும் கண்ணியத்தின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும். உலக அளவில் ஏற்படும் புதிய காலனித்துவ போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று, சர்வதேச சட்டங்களின் தொடர் மீறல்களுக்கும், புதிய காலனித்துவ போக்குகளுக்கும் மத்தியில் உலகளாவிய அதிகார சமநிலை முன்னெப்போதையும் விட அதிக அவசரத் தேவையாக உள்ளது’’ என்றார்.
