×

மாஜி கணவரை உளவு பார்த்த விவகாரம்: பிரபல ஹாலிவுட் நடிகைக்கு பிடிவாரன்ட்; காதலன் கைது

மியாமி: பிரபல நடிகை மற்றும் அவரது காதலன் மீது தொடரப்பட்ட உளவு பார்த்தல் தொடர்பான குற்றச்சாட்டில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமி நகரில் வசித்து வரும் நடிகை லிசா ஹோக்ஸ்டைன் (43) – முன்னாள் கணவர் டாக்டர் லியோனார்டு லென்னி ஹோக்ஸ்டைனுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த சமயத்தில், அதாவது 2023ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை, லென்னி தனது காரில் ரகசியமாக ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தார்.

தனது தனிப்பட்ட போன் உரையாடல்களை லிசா மற்றும் அவரது தற்போதைய காதலரான சாப்ட்வேர் இன்ஜினியர் ஜோடி கிளிடன் ஆகியோர் சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக அப்போது புகார் எழுந்தது. இது தொடர்பாக லென்னி தாக்கல் செய்த மனுவில், தனது காரின் அடியில் ஒட்டுக்கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அப்போது இந்த குற்றச்சாட்டை மறுத்த லிசா, இதெல்லாம் ‘சுத்தமான பொய்’ என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கிரிமினல் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இது தொடர்பாக ேநற்று வெளியான தகவலின்படி, லிசா மற்றும் ஜோடி கிளிடன் மீது தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இடைமறித்து ஒட்டுக்கேட்டதாக தலா ஒரு பிரிவின் கீழ் தீவிரமான கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜோடி கிளிடன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை லிசா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லிசாவின் வக்கீல் ஜெயின் வெய்ன்ட்ராப் கூறுகையில், ‘இது விவாகரத்து தொடர்பான ஒரு சிவில் பிரச்னை, இதனை கிரிமினல் கோர்ட்டுக்கு கொண்டு சென்றது தவறு’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Maggie ,Hollywood ,Miami ,Lisa Hoxstein ,Miami, USA ,Dr. ,Leonard ,
× RELATED பாகிஸ்தானில் அடுத்த 2 நாட்களில்...