×

கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியது: மீண்டும் போர் மூளும் அபாயம்; மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

கெய்ரோ: ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்வதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி நேற்று மாலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து துறைமுகங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் மிரட்டி உள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், 40 நாள் சண்டைக்குப் பிறகு கடந்த 8ம் தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

இதில் நிரந்தரமாக போரை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தான் முன்னிலையில் இஸ்லாமபாத்தில் அமெரிக்கா-ஈரான் பிரதிநிதிகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஈரானுக்கு சட்டவிரோதமாக கட்டணம் செலுத்தும் எவருக்கும் திறந்த கடலில் பாதுகாப்பான பயணம் அமையாது எனவும் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா உள்ளிட்ட பிராந்தியங்களில் ராணுவ உத்தரவுகளை பிறப்பிக்கும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் நேற்று விடுத்த அறிவிப்பில், ‘‘திங்கட்கிழமை (ஏப்.13) காலை 10 மணியில் இருந்து (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள அனைத்து ஈரான் துறைமுகங்கள் உட்பட கடலோர பகுதிகளில் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் எந்த பாரபட்சமின்றி தடுத்து நிறுத்தப்படும்.

ஈரான் அல்லாத பிற துறைமுகங்களுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களை தடுக்க மாட்டோம். உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்லும் கப்பல்கள் முழு பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஈரான் ராணுவம் மற்றும் புரட்சிகர பாதுகாப்பு படை கடும் கண்டனம் தெரிவித்தன. ‘‘பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடலில் பாதுகாப்பு என்பது அனைவருக்குமானதாக இருக்க முடியும், இல்லாவிட்டால் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. ஈரான் துறைமுகங்கள் முற்றுகையிடப்பட்டால், வளைகுடா பகுதியில் எந்த துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது. ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா திட்டமிட்டுள்ள முற்றுகையானது சட்டவிரோதமானது மற்றும் கடற்கொள்ளைக்கு இணையான செயல்’’ என எச்சரிக்கை விடுத்தன.

சர்வதேச சட்டத்தின்படி, ஹார்முஸ் ஜலசந்தியை மூட எந்த நாடுகளுக்கும் உரிமை இல்லை என ஐநா கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் அறிவுறுத்தினார். இந்த சூழலில் இந்திய நேரப்படி நேற்று மாலை 7.30 மணிக்கு ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி அமலுக்கு வந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘‘வளைகுடாவில் எங்கள் முற்றுகையை தடுக்க வரும் ஈரான் கப்பல்கள் உடனடியாக அழிக்கப்படும்’’ என எச்சரித்தார். அமெரிக்காவின் முற்றுகை அமலுக்கு வந்த பிறகு ஈரான் பதில் நடவடிக்கை குறித்து உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இது மேற்கு ஆசியாவில் மீண்டும் போரை தொடங்கும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன் கப்பல் நிறுத்தம்
* டிரம்பின் முற்றுகை நடவடிக்கையை ஆதரிக்கப் போவதில்லை என இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். அதே சமயம், ஈரான் துறைமுகங்கள் மீது கடற்படை முற்றுகை விதிக்கும் டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு கூறினார்.
* 2 வார கால போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து 40க்கும் மேற்பட்ட வர்த்தகக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றன. இதுவே போருக்கு முன்பு ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 135 கப்பல்கள் இப்பாதையை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
* முற்றுகை நடவடிக்கையை தொடர்ந்து ஈரான் தெற்கு கடல் பகுதியில் இருந்து 200 கிமீ தொலைவில் ஓமன் வளைகுடாவில் அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர் கப்பலும் அத்துடன் மேலும் 2 போர் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளன.

* 15 இந்திய கப்பல்கள் கதி என்னவாகும்?
மேற்கு ஆசியா போருக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கிய நாடுகளுக்கு எதிராக அதிபர் டிரம்ப் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் ஈரானுக்கு பெருமளவில் அழுத்தம் தர முடியும் என்பதே அவரது நோக்கம். போருக்கு பிறகு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதிக்கவில்லை. அதே சமயம், இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, ஈராக், ரஷ்யா,துருக்கி, பிலிப்பைன்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தொடர்ந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியது. இந்தியாவின் 15 கப்பல்கள் இன்னும் ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி உள்ளன. இனி அவற்றின் வருகை கேள்விக்குறியாகி உள்ளது. 15 இந்திய கப்பல்களில் பெரும்பாலும் சமையல் எரிவாயுவான எல்பிஜி ஏற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியாவிடம் ஈரான் கட்டணம் வசூலித்ததா?
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க கப்பல்களிடம் ஈரான் கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது என அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். இது குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பத்தாலி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்கள் ஈரானுக்கு எந்த சுங்க கட்டணமும் செலுத்தவில்லை. இதைப் பற்றி இந்திய அரசிடமே கேட்கலாம். இந்த கடினமான காலகட்டத்திலும் நாங்கள் நல்லுறவை பேணி வருகிறோம்’’ என்றார்.

* மத்தியஸ்தம் சரியில்லை
ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் உண்மையில் நன்கு தயாராக இருப்பதற்கான நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை’’என்றார்.

* லெபனான்-இஸ்ரேல் இன்று பேச்சுவார்த்தை
ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நேற்று குறைந்த அளவில் நடந்ததாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 13 தெரிவித்துள்ளது.

* ஹார்முசை திறக்க பிரான்ஸ், இங்கி. திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான, பாதுகாப்பான கப்பல் பயணத்திற்கு வழிவகுக்கும் வகையில் இங்கிலாந்து தலைமையில் 65க்கும் மேற்பட்ட நாடுகள் சமீபத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தின. இதைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க உதவும் அமைதியான பன்னாட்டு திட்டத்திற்கு பங்களிக்க தயாராக உள்ள நாடுகளுடன் பிரான்சும், இங்கிலாந்து மாநாட்டை நடத்த இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று கூறினார். அவர் எக்ஸ் தளத்தில், ‘‘ தற்காப்பு நோக்கம் கொண்ட இந்த திட்டம், சூழ்நிலைகள் அனுமதித்தவுடன் செயல்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.

Tags : US ,Middle East ,Cairo ,US Navy ,Iran ,
× RELATED ஈரான் போர் விவகாரத்தால் டிரம்ப்-போப்...