மெல்போர்ன்: கனடா மாஜி பிரதமரின் காதலி உடனான பழைய பாலியல் விவகாரத்தை கிளப்பிய நடிகையின் புகார் குறித்து ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ரூபி ரோஸ் (40) மெல்போர்ன் போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இது குறித்து ரூபி ரோஸ் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாப் பாடகி கேட்டி பெர்ரி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்ன் ஸ்பைஸ் மார்க்கெட் இரவு விடுதியில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
எனக்கு அப்போது 20 வயது இருக்கும். இப்போது எனக்கு 40 வயது ஆகிறது. இந்த காயத்திலிருந்து மீண்டு எனது குரலை பதிவு செய்ய இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை விட அதிக அதிகாரம் படைத்தவர்களின் பெயர்களை போலீஸ் நிலையத்தில் கூறிவிட்டேன், இப்போது நிம்மதியாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகார்களை கேட்டி பெர்ரி தரப்பு கடுமையாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக கேட்டி பெர்ரியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘சமூக வலைதளங்களில் ரூபி ரோஸ் பரப்பி வரும் இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற பொய் பிரசாரம். ரூபி ரோஸ் ஏற்கனவே இது போன்று பல முக்கிய நபர்கள் மீது ஆதாரமற்ற புகார்களை கூறி வந்துள்ளார். தற்போது அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை கேட்டி பெர்ரி திட்டவட்டமாக மறுக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேட்டி பெர்ரி தனது காதலரும் கனடாவின் முன்னாள் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோவுடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கோச்செல்லா இசை விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
