×

தேயிலை, காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம்

கோத்தகிரி,ஏப்.14: கோத்தகிரி -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள தனியார் தேயிலை காபி தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அவ்வாறு இடம் பெற்றுள்ள காட்டு யானைகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர், தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது.

மேலும் உணவு தேடி முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் சர்வ சாதாரணமாக தேயிலை, காப்பி தோட்டங்களிலும், சாலைகளிலும் உலா வருவதால் கோத்தகிரி மலைப்பாதையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மலைப்பாதையில் உலா வரும் போது காட்டு யானைகளை புகைப்படம் எடுப்பது, கூச்சலிட்டு தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் வனத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Kotagiri ,Kotagiri-Mettupalayam ,Nilgiris ,
× RELATED பறக்கும் படையிடம் ரூ.1.75 லட்சம் சிக்கியது