- டிரம்ப்
- திருத்தந்தை லியோ
- ஈரான்
- கிறிஸ்தவ சமயத்தை தோற்றுவித்தவர்
- வாஷிங்டன்
- எங்களுக்கு
- அதிபர் டிரம்ப்
- போப் லியோ XV
- கத்தோலிக்க சர்ச்
- அமெரிக்கா…
வாஷிங்டன்: ஈரான் போர் விவகாரத்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப், போப் 15ம் லியோ இடையே வார்த்தை மோதல் முற்றியுள்ளது. மேலும், அதிபர் டிரம்ப் தன்னை இயேசுவாக சித்தரித்த புகைப்படத்தையும் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவை சேர்ந்த 15ம் லியோ போப் ஆக பதவி வகிக்கிறார். இவர், வெனிசுலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா நடத்திய தாக்குதல், ஈரான் மீதான தாக்குதல் போன்ற அதிபர் டிரம்பின் முடிவுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஈரானில் நடக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு சர்வ வல்லமை படைத்தவர் என்ற மாயையே காரணம் என அதிபர் டிரம்பின் பெயரை குறிப்பிடாமல் போப் லியோ கடந்த வாரம் கருத்து தெரிவித்தார். மேலும், போர் தொடுப்பவர்களின் பிரார்த்தனைகளை கடவுள் கேட்பதில்லை, மாறாக அவற்றை நிராகரிக்கிறார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் புளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்கு விமானத்தில் திரும்பும் வழியில் தனது சமூக ஊடக பதிவிலும், வாஷிங்டன் திரும்பிய பின் அளித்த பேட்டியிலும் போப் லியோவை கடுமையாக விமர்சித்தார்.
அதிபர் டிரம்ப், ‘‘அமெரிக்காவில் பிறந்த போப் 15ம் லியோ சிறப்பான முறையில் செயல்படுவதாக தோன்றவில்லை. அவருக்கு குற்றங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். அவர் ஒரு தீவிர தாராளவாத சிந்தனையாளர். தீவிர இடதுசாரிகளுக்கு சலுகை காட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுக்கு பெருமளவில்போதைப் பொருட்களை அனுப்பி வந்த வெனிசுலாவை தாக்கியதை மிகவும் மோசமான செயலாக கருதும் போப் எனக்கு தேவையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பதை சரி எனக் கூறும் போப் எங்களுக்கு தேவையில்லை. அமெரிக்கர் என்பதால்தான் லியோவுக்கு போப் பதவி கிடைத்திருக்கிறது. நான் வெள்ளைமாளிகையில் இல்லாவிட்டால் போப் பதவியை லியோ பெற்றிருக்க முடியாது. போப் அரசியல் பேசுவதை விட்டுவிட்டு, போப்புக்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்’’ என சரமாரியாக விமர்சித்தார்.
இதுமட்டுமின்றி, இயேசு கிறிஸ்துவைப் போன்ற புனித சக்திகள் தன்னிடம் இருப்பதாகக் குறிப்பிடும் ஒரு ஏஐ புகைப்படத்தையும் டிரம்ப் பதிவிட்டார். அதில் நீண்ட அங்கி அணிந்த டிரம்ப், படுக்கையில் இருக்கும் ஒரு மனிதரின் நெற்றியில் கைகளை வைக்க, அவரது விரல்களிலிருந்து ஒளி வெளிப்படுகிறது. புகைப்படத்தின் பின்னணியில் ஒரு சிப்பாய், செவிலியர், பிரார்த்தனை செய்யும் பெண் மற்றும் பேஸ்பால் தொப்பி அணிந்த தாடி வைத்த ஒருவர் அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர். வானம் கழுகுகள், அமெரிக்கக் கொடி, பறக்கும் போர் விமானம் போன்ற பிம்பங்களும் உள்ளன. போப்பாண்டவர்களுக்கும் அமெரிக்க அதிபர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு வழக்கத்திற்கு மாறானது அல்ல. ஆனாலும் போப்பாண்டவரை அமெரிக்க அதிபர் நேரடியாக விமர்சிப்பது மிகவும் அரிதானது. மேலும், டிரம்பின் இத்தகைய கடுமையான விமர்சனங்கள் மிக மிக அசாதாரணமானது.
டிரம்பை கண்டு பயப்படவில்லை;
அல்ஜீரியா செல்லும் வழியில் விமானத்தில் இருந்தபடி போப் 15ம் லியோ நேற்று அளித்த பேட்டியில், ‘‘நான் எந்த விவாதத்திலும் ஈடுபடப் போவதில்லை. நான் உறுதியாக நம்பும் பாதையில் எனது பயணத்தை தொடர்வேன். நான் கூறும் கருத்துக்கள் நிச்சயமாக எவர் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாக கருதப்படக் கூடாது. அமைதி, நல்லிணக்கத்திற்கான வாட்டிகனின் வேண்டுகோள்கள் நற்செய்தி நூலின் அடிப்படையில் அமைந்தவை. அமைதியை ஏற்படுத்துவோம் ஆசிர்வதிக்கப்பட்டோர் என்பதே நற்செய்தி நூலின் செய்தி. இதை பறைசாற்றவும், போரை தவிர்க்கும் வழிகளை நாட அனைத்து மக்களையும் அழைக்கவும் நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். டிரம்ப் நிர்வாகத்தை கண்டு எனக்கு சிறிதும் அச்சமில்லை’’ என்றார்.
