×

காலமெல்லாம் காப்பாற்றும் கம்பால ராமச்சந்திர தீர்த்தர்!

மகத்துவம் மிக்க மத்வ மகான்கள்

வேலூரில் உள்ள சேண்பாக்கம் என்னும் இடத்தில், “ஸ்ரீ மத்வ விஜய நகரம்’’ என்று போற்றப் படும் “நவ பிருந்தாவனங்கள்’’ (ஒன்பது மூலபிருந்தாவனங்கள்) உள்ளன. ஒவ்வொரு மகான்களும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கின்றன. அவர்களின் மகிமைகளை தெரிந்துக்கொண்டதும். என் மனது சேண்பாக்கத்தையே வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. மீண்டும் அங்கு செல்ல மாட்டோமா? மகான்களின் தரிசனம் மீண்டும் கிட்டாதா? என்று என் மனமானது ஏங்குகிறது!

துவைத சம்ரதாயத்தை நிறுவிய ஸ்ரீமத் மத்வாச்சாரியாரின் பாதகமலங்கள் பதிந்த தலம். அதே போல், மகான் ஸ்ரீ ராகவேந்திரர், 14 நாட்கள் தங்கியிருந்து தன் குருமார்களை பூஜித்துள்ளார்.மகான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமியின் மூலபிருந்தாவனம் இருக்கும் மந்திராலயத்தில் எப்படி துங்கபத்ரா நதி ஓடுகிறதோ.. அதேபோல், சேண்பாக்கத்தில் இருக்கக் கூடிய நவ பிருந்தாவன கோயிலின் அருகில் பாலாறு ஓடுகிறது.

இந்த கோயிலை, “பஞ்ச லக்ஷண ஆலயம்’’ என்று கூறுகிறார்கள். அதாவது;

1) மூர்த்தி – ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகா பிருந்தாவனம், மற்றும் ஒன்பது மூலபிருந்தாவனங்கள்.

2) தலம் – மத்வர் விஜயம் செய்த புண்ய பூமி.

3) தீர்த்தம் – க்ஷிர நதி எனப் பெயர் பெற்ற பாலாறு.

4) புராணம் – நவ பிருந்தாவன தீர்த்தர்களின் ஜீவ சரித்திரங்கள்.

5) விருட்சம் – வன்னி மரம்.

ஆகையால், இத்தலத்தை பஞ்சலட்சண ஆலயம் என்று கூறுகிறார்கள். இந்த மடத்திற்குள் நுழைந்த உடன், வலதுபுறத்தில் மாஞ்சால் அம்மனும், இடதுபுரத்தில் விநாயகப் பெருமானும் காட்சியளிக்கிறார்கள். இவர்களை சேவித்துவிட்டு;

1) ஸ்ரீ கம்பால ராமச்சந்திர தீர்த்தர். (வியாசராஜ மடம்)

2) ஸ்ரீ பதி தீர்த்தர். (வியாசராஜ மடம்)

3) ஸ்ரீ வித்யாபதி தீர்த்தர். (உத்ராதிமடம்)

4) ஸ்ரீ சத்யாதிராஜ தீர்த்தர். (உத்ராதிமடம்)

5) ஸ்ரீ கேசவ ஒடையர். (பிடி சந்நியாசி)

6) ஸ்ரீ கோவிந்த மாதவ ஒடையர். (பிடி சந்நியாசி)

7) ஸ்ரீ பூவராக ஒடையர். (பிடி சந்நியாசி)

8) ஸ்ரீ ரகுநாத ஒடையர். (பிடி சந்நியாசி)

ஆகிய எட்டு மூலபிருந்தாவனத்தை தரிசித்துவிட்டு ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமிகளின் மிருத்திகாபிருந்தாவனத்தையும் தரிசிக்கலாம். எட்டு மூலபிருந்தாவனங்கள், ஒரு மிருத்திகாபிருந்தாவனம் ஆகமொத்தத்தில் ஒன்பது பிருந்தாவனங்கள் இருக்கின்றன. ஆகையால்தான் “நவபிருந்தாவனம்’’ என்று பெயர் பெற்றது.

தற்போது, நாம் ஸ்ரீ கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் மகிமைகளை பற்றிய சில சுவாரஸ்யங்களை பார்ப்போம்.கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் பூர்வாஸ்ரம பெயர் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், இவரின் தந்தையின் பெயர், குப்பண்ணாச்சார்யா ஆகும். 1575 – ஆம் ஆண்டு பிறந்த கம்பால ராமச்சந்திர தீர்த்தர், 1632 – ஆம் ஆண்டு பிருந்தாவனமானார். ஆக, சுமார் 393 ஆண்டுகள் பழமைவாய்ந்தது ஸ்ரீ கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் மூலபிருந்தாவனம்!

இவரின் ஆஸ்ரம குரு ஸ்ரீ ஸ்ரீபதி தீர்த்தர் ஆவார். கம்பால ராமச்சந்திர தீர்த்தர், வியாசராஜ மடத்தின் 10வது மடாதிபதியாவார்.மேலும், 1612 – ஆம் ஆண்டு முதல் 1632 – ஆம் ஆண்டு வரை இருபது ஆண்டுகள் மடாதிபதியாக இருந்துள்ளார். இவரை கம்பாளு ராமச்சந்திர தீர்த்தர், கம்பாலூர் ராமச்சந்திர தீர்த்தர், கம்பாள ராமச்சந்திர தீர்த்தர் என்று அழைக்கிறார்கள்.

வேலூரை அடுத்த பென்னாத்தூரில் கம்பால ராமச்சந்திர தீர்த்தர் விஜயம் செய்கிறார். அந்த சமயம் சாதுர்மாதம் என்பதால், ஸ்வாமிகள் அங்கேயே தங்கியிருந்து பூஜைகளையும், சாதுர் மாத விரதமுறை களையும் கடைபிடிக்கிறார். இப்படி இருக்க ஒரு நாள்;பாலாற்று கரையின் ஓரமாக கம்பால ராமச்சந்திர தீர்த்தர் தவம் செய்துகொண்டிருந்தார். பாலாற்றின் அக்கரையில், விவசாயி ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டது. விஷம் வீரியம் உள்ள பாம்பு. கடித்த சில மணித்துளிகளில், விஷமானது தலைக்கு ஏறி விவசாயி மாண்டு போனார். இதனை அறிந்த விவசாயி உறவினர்கள் கதறி அழத் தொடங்கினார்கள்.

அவர்களின் கூக்குரல் ஸ்வாமிகளின் காதில் எட்டியது. கண்களை திறக்காமல் தொடர்ந்து தவம் செய்துகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில், கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் மேலே அணிந்திருந்த ஷாட்டி என்று சொல்லக்கூடிய காவி உடையானது, தானாக காற்றில் பறந்தது.அழுதுக்கொண்டிருந்த விவசாயி உறவினர்கள், காற்றில் பறந்து வந்து கொண்டிருந்த காவி உடையினை பார்த்து அதிசயித்தனர்.

கீழே மாண்டு கிடந்த விவசாயி மீது, பறந்து வந்த காவி உடையானது மேலே விழுந்தது. சற்று நேரத்தில் விவசாயி உயிர்ப்பித்து எழுந்தார். இதனைக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்துப்போனார்கள். மீண்டும் அந்த காவி உடை, கம்பால ராமச்சந்திர தீர்த்தரை நோக்கி பறந்து செல்ல, அதனை விவசாயி உட்பட அனைவரும் பின்தொடர்ந்து சென்றனர்.

பறந்துக்கொண்டிருந்த காவி உடை, தியானம் செய்துக்கொண்டிருந்த கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் முன்பாக விழுந்தது. இதனைக்கண்ட அனைவரும் பரவசமடைந்தனர். ஸ்ரீ கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் புகழ் ஊர் முழுவதிலும் பரவியது. தீராத நோய்களை தீர்த்து வைப்பது, பசி பட்டினியில் வாடும் குடும்பங்களை தனம் தானியம் என வளம்பெற செய்வது, சொட்டு நீர்கூட கிடைக்காத இடங்களில், தனது தவம் வலிமையால் தண்ணீரை கிடைக்க செய்வது என கம்பால ராமச்சந்திர தீர்த்தர் பல மகிமைகளை நிகழ்த்தினார்.

இதனால், கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் மீது சிலர் பொறாமைக்கொண்டனர். இவரை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று எண்ணினர்.வழக்கம் போல், காலையில் தியானம் செய்துகொண்டிருந்தார், கம்பால ராமச்சந்திரதீர்த்தர். அப்போது சிலர், ஒரு பாறாங்கல் ஒன்றை எடுத்து கம்பால ராமச்சந்திரதீர்த்தரின் மீது தூக்கி ஏறிய, அந்த கல் அவரின் தலையின் மீது விழாமல் காற்றினால் அந்தரத்தில் மிதந்தது. இதனைக்கண்ட எதிரிகள், அதிர்ந்தனர்.

இந்த காட்சியை கண்டு, நடுநடுங்கி, கம்பால ராமச்சந்திர தீர்த்தரிடத்தில் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அவர்களை மன்னித்து அருளிய கம்பால ராமச்சந்திர தீர்த்தர், தியானத்தில் இருந்து எழுந்தவுடன், அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்த கல், சடார் என்று கீழே விழுந்தது. அதன் பிறகு தனது சீடர்களை அழைத்த கம்பால ராமச்சந்திர தீர்த்தர், இந்த கல்லில் அழகிய அனுமன் ஒன்றை செதுக்கச் சொன்னார். பின்னர், அந்த கல்லை நான் பிருந்தாவனம் ஆன பிறகு, எனது பிருந்தாவனத்திற்கு மேலே வைக்க உத்தரவிட்டார். இன்றும் கம்பால ராமச்சந்திர தீர்த்தரின் மூலபிருந்தாவனத்தின் மேலே இக்கல்லை காணலாம்.

கம்பால ராமச்சந்திர தீர்த்தர் பீடாதிபதியாக இருந்த காலத்தில், தானாக பிரியப்பட்டு வந்தவர்களையெல்லாம் ஹரி பக்தர்களாக்கினார். மேலும், எண்ணற்ற பல வேத பண்டிதர்களை உருவாக்கினார். இவரின் தவத்தை மெச்சி, திருப்பதி ஏழுமலையான் நேரடியாக காட்சிதந்து அருள்புரிந்ததாக கூறப்படுகிறது.வேலூர் கோட்டை மதில் சுவர்களில், துளசி பிருந்தாவனம் அமையக்காரணமானவர். மகான் ஸ்ரீ ராகவேந்திரதீர்த்தரும், ஸ்ரீ கம்பால ராமச்சந்திர தீர்த்தரும் சமகாலத்தவர் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆகையால், வேலூரில் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

தனது குருவான ஸ்ரீ ஸ்ரீபதி தீர்த்தரின் மூலபிருந்தாவனத்தை தரிசித்தவாறு, 1632 – ஆம் ஆண்டு, மார்க்க சீர்ஷ (மார்கழி) சுக்ல திருதியை அன்று பிருந்தாவன பிரவேசமானார்.

எப்படி செல்வது?: வேலூரில் இருந்து சேண்பாக்கம் நவபிருந்தாவன கோயில் வெறும் மூன்று கிலோ மீட்டர்தான். வேலூரில் இருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவை இக்கோயிலுக்கு செல்கின்றன. கோயில் தொடர்புக்கு: 9486103950.

ரா.ரெங்கராஜன்

Tags : Gampala Ramachandra Thirthar ,Senpakkam ,Vellore ,Nava Virundavanas ,Sri Madva Vijaya Nagara ,
× RELATED கருணையால் நம்மை ஆளும் நிர்குண அம்பிகை